சாலை மறியல் செய்ததால் வீடு செல்ல அனுமதி
நாகர்கோவில், ஜூன். 5- கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கை யாக கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அறி விக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரு கிறது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருபவர்கள் மாவட்ட எல்லையில் தீவிர மருத்துவ பரிசோ தனைக்கு பிறகே மாவட்டத்துக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களில் பணி புரிந்து வரும் மக்கள் அரசின் அனுமதி வாங்கி தங்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டி ருக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கோவிட்19 மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப் படும் நிலையில் அவர்கள் பல மணி நேரம் உணவு தண்ணீரின்றி அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு மாவட்ட நிர்வா கம் சார்பிலோ, காவல் துறையினரோ எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் புதனன்று சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து சுமார் 25 வாகனங்களில் வந்த சுமார் 80 பேர் காவல் கிணறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். அவர்களின் மருத்துவ பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்ட பிறகு அவர்கள் உணவு தண்ணீரின்றி 4 மணி நேரத்திற்கும் மேலாக காரிலேயே காத்திருந்தனர். இதனால் பொறுமையிழந்த பயணிகள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் தங்களுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டு இரவு 1 மணியளவில் ஆரல்வாய் மொழி பகுதியில் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறையினர் அவர்க ளின் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்தனர். ஏற்கனவே கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பய ணிகள் பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே சொந்த ஊருக்கு செல்ல அனு மதிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎம் கோரிக்கை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி கூறுகையில், வெளிமாவட்டங்களில் இருந்து சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் முடிவு வரும் வரை அவர்களுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசின் செலவிலேயே செய்துகொடுக்க வேண்டும். வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் பயணிகளை அலைக்கழிக்கா மல் அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நள்ளிரவில் மறியல் செய்த பயணிகளுக்கு உணவு தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்து கண்கா ணிக்காமல் மருத்துவ பரிசோதனை முடிவு கள் வரும் முன்னரே சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.