ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு 1,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு
திருப்பத்தூர், ஆக. 27 - ஆம்பூர் கலவரம் வழக்கில் புதன்கிழமை (ஆக.27) அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு வியாழக்கிழமை (ஆக.28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பவித்ரா மாயமான வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்திற்கு வழிவகுத்தது. 2015-ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று இரவு ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறி 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 15 பெண் காவலர்கள் உட்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில், 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாகுமாரி ஒத்திவைத்துள்ளார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஆம்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.