tamilnadu

img

வேலையின்மை, மன அழுத்தம் காரணமாக தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்...

மதுரை:
தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலை வாய்ப்பை இழந்து மன அழுத்தத்துக்குள்ளானோர் தற்கொலை செய்து கொள்வதே, இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் தற்கொலை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒன்பது மாவட்டங்களில் 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா பொது முடக்கம், மனிதர்களின் மனநிலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களால் மன அழுத்தத்துக்குள்ளான பலரும் அந்த சூழ்நிலையைக் கையாள தெரியாமல் இதுபோன்ற மிக மோசமான முடிவை எடுப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.

2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஒன்பது மாவட்டங்களில் இதுவரை 1,300 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக மத்திய மண்டல காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.அதிகபட்சமாக தஞ்சாவூரில் 326 தற்கொலைகளும் (201 ஆண்கள், 102 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள்), திருச்சிராப்பள்ளியில் 170 தற்கொலைகளும் நடந்துள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர் சார்ந்த பகுதிகளில்  சராசரியாக ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். மூன்றாவது இடத்தில் 164 தற்கொலைகளுடன் திருவாரூர் உள்ளது. மயிலாடுதுறையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 72 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், கடந்தாண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் 342 தற்கொலைகள் பதிவாயின என்கிறார்.இது குறித்து  மருத்துவ உளவியலாளர் டி.ரந்தீப் ராஜ்குமார், கூறுகையில் “வழக்கமாக பத்து பேரில் ஐந்து பேர் பல பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலை எதிர்கொள்கின்றனர். கொரோனா ஊரடங்கு மக்களை மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதித்துள்ளது, இது மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுத்தது. சமீபத்திய ஆய்வின்படி, 40 பேரில் நான்கு பேருக்கு ஆழ்ந்த மனச்சோர்வு (தற்கொலை சிந்தனை) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரு நகரங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மனநல ஆலோசனையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்திருந்தாலும், அவர்களால் மன அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என்றார்.பெரும்பாலான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனை மற்றும் உடல்நலப் பிரச்சனை காரணமாக நடப்பதாகவும் கூறுகிறார்கள்.இந்த பொது முடக்கக் காலத்தில் சிறுவர்களிடையேயும் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது. தனிமை, சமூகத்துடனான இணைப்பின்மை, சரியான தூக்கமின்மை போன்றவையும் இதற்குக் காரணங்களாக உள்ளன. 

மாவட்ட வாரியாக தற்கொலை செய்து கொண்டோர் விவரம்:-

திருச்சிராப்பள்ளி-170, புதுக்கோட்டை-128, கரூர்-101, பெரம்பலூர்-115,  அரியலூர்-105, தஞ்சாவூர்- 326 (23 பேர் குழந்தைகள்), திருவாரூர்- 164, நாகப்பட்டினம்-123, மயிலாடுதுறை- 72.இவர்களில் 63 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் (18 ஆண்கள் மற்றும் 45 பெண்கள்)

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள தகவல்களிலிருந்து...
 

;