tamilnadu

img

காதல் திருமணம் செய்தவரின் குடும்பத்தினருக்கு சித்ரவதை... ஆத்தங்கரைப்பட்டியில் தலித் இளைஞர் மர்ம மரணம்

மதுரை:
காதல் திருமணம் செய்தவர் கள் எங்கே எனக்கேட்டு ஒருகுடும்பத்தினரை கடந்த ஒருமாதமாக காவல்துறை சித்ரவதை செய்துவந்துள்ளனர். சித்ரவதை தாங்கமுடியாமல் காதல்திருமணம் செய்து கொண்டவரின் சகோதரர் வியாழனன்று  மர்மமான முறையில் உயிரிழந் தார். காவல்துறையின் சித்ரவதையே இதற்குக் காரணமெனக்கூறி கிராமமக்கள் சுமார் ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்தினர். 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டி வாழைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு இதயக்கனி, ரமேஷ், ராஜ்குமார், சந்தோஷம் என்ற மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களில் ஒருவரான இதயக்கனி (26) அதே பகுதியைச் சேர்ந்த புனிதாஎன்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் அவர் புனிதாவை திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்றுவிட்டார்.இதையடுத்து புனிதாவின் குடும்பத்தினர் சாப்டூர் காவல் நிலையத்தில் தமது மகள் மைனர்என்றும். இதயக்கனி கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல்துறையினர் கண்ணியப்பன் குடும்பத்தை விசாரிக்கிறோம் என்ற பெயரில்கடந்த ஒரு மாதமாக சித்ரவதை செய்துவந்ததாகக் கூறப் படுகிறது. அவர்களின் நான்கு செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துவைத்துள்ளனர். குறிப்பாக பாண்டியம்மாளை கடுமையாகசித்ரவதை செய்ததாகக் கூறப் படுகிறது, கண்ணியப்பனின் மகன்களில் ஒருவரான சந்தோஷத்தை தாக்கியதில் அவருக்கு காயங்கள் உள்ளன. புதனன்று மாலை மீண்டும் விசாரணை என்ற பெயரில் கண்ணியப்பன் மகன்களில் ஒருவரான ரமேஷை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

புதனன்று மாலை காவல்நிலையம் சென்றவர் வியாழனன்று காலை ஆத்தங்கரை பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்துஆத்தங்கரைபட்டி கிராமத்தினர் காவல்துறையின் சித்ரவதையால்தான் ரமேஷ் உயிரைமாய்த்துக்கொண்டார். சம்பந் தப்பட்ட காவல்துறையினர் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி போராட்டம்நடத்தினர். தகவலறிந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தே.செல்லக்கண்ணு, மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன், மணிக்கிருஷ்ணன், கட்சி உறுப்பினர்கள் செல்லதுரை, சங்கர்,ரமேஷ் ஆகியோர் ஆத்தங்கரைபட்டி வந்தடைந்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்ததை நடத்தப்பட்டது. காலை 11.30 மணிக்குதுவங்கிய பேச்சுவார்த்தை பிற் பகல் 2.15 வரை நடைபெற்றது. காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மரத் தில் தொங்கும் ரமேஷின் உடலைகீழே இறக்குவோம் என்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் சாப்டூர் காவல் சார்பு ஆய் வாளர் செல்லக்கண்ணன், காவலர் புதியராஜன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாதஇரண்டு காவலர்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து ரமேஷின் உடல் உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வியாழன் மாலை கொண்டுசெல்லப்பட்டது.உயிரை மாய்த்துக்கொண்ட ரமேஷ் நாகர்கோவிலிலுள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். ரமேஷின் மரணத்தை சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சாப்டூர் காவல்துறையினர்.

;