tamilnadu

img

கோவையில் இன்று தீக்கதிர் முப்பெரும் விழா

கோயம்புத்தூர், செப். 26 - ஊடக உலகில் உண்மையின் பேரொளியாம் தீக்கதிர் நாளிதழ் தனது 60ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வைரவிழா சிறப்பு மலரை இன்று (செப்டம்பர் 27) வெளியிடுகிறது. தீக்கதிர் வைரவிழா, சிறப்பு மலர் வெளியீடு, சந்தா வழங்குதல் என முப்பெரும் விழா செப்டம்பர் 27 செவ்வா யன்று மாலை 5 மணியளவில் கோயம்புத்தூரில் உள்ள நவ இந்தியா சாலையில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர்.கலையரங்கில் நடைபெறுகிறது.

தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் பேசுகிறார். வைரவிழா மலரை வெளியிட்டு தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உரையாற்றுகிறார். மலரை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பெற்றுக் கொள்கிறார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், சு.வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி, பிரண்ட் லைன் ஏட்டின் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜய சங்கர், மூத்த பத்திரிகையாளரும் தீக்கதிர் இணை ஆசிரியருமான சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.காமராஜ் சந்தாக்களைப் பெறுகிறார்.

முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, பொறுப்பா சிரியர்கள் எம்.கண்ணன், எஸ்.பி.ராஜேந்திரன், கோவை பதிப்பு மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தலைவர்கள் வாழ்த்து

தீக்கதிர் வைரவிழா சிறப்பு மலர் வெளியிடப்படுவதை யொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்  காரத், திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், பிருந்தா காரத்,  எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன்  மாஸ்டர், கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஏட்டின் ஆசிரியருமான கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீத்தாராம் யெச்சூரி

கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “கடந்த 60 ஆண்டுகாலமாக புரட்சியின் நோக்கத்திற்கும் புரட்சிகர இயக்கத்திற்கும் தீக்கதிர் இடைவிடாத சேவையினை ஆற்றி வந்திருக்கிறது. தீக்கதிர் வைரவிழாவையொட்டி ஓர் ஆண்டு முழுவதும் நடைபெறுகிற நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தீக்கதிர் நாளிதழின் விநியோகமும் வாசகப் பரப்பும் பெருமளவுக்கு விரிவடையும் என்று நிச்சயம் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக் சர்க்கார்

திரிபுரா முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ருமான மாணிக் சர்க்கார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தீக்கதிர் ஏடு ஒரு வணிகப் பத்திரிகை அல்ல. மாறாக, தொழிலாளி வர்க்கம், விவசாய வர்க்கம் மற்றும் இதர அனைத்து உழைக்கும் மக்களின் கைகளில் தவழ்கிற ஒரு கூர்மையான ஆயுதம் ஆகும். இன்றைக்கு ஆளும் வர்க்க  அரசு, ஊடகத்தின் மீது இடைவிடாத தாக்குதலை  தொடுத்து வருகிறது. சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சி யினுடைய நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் ஊடகங்கள் தலைவணங்கிச் செல்லுமாறு கடுமையாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன. எனவே தீக்கதிர் போன்ற நாளிதழின் மிகக் கடுமையான போராட்டத்திற்கிடையிலான பயணம். குறிப்பாக 60 ஆம் ஆண்டில் கம்பீரமான பயணம். எந்தவிதத்திலும் சாதாரணமானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.பெ.சாமிநாதன்

தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விடுத்துள்ள  வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கவும் தமிழ் மொழியின் வளர்ச்சியை உறுதி செய்யவும், உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கவும் தொய்வின்றி பாடுபட்டு வருகிறது தீக்கதிர் நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிர், அதிமுக-பாஜக கூட்டணியின் பிடியில் தாழ்ந்து கிடந்த தமிழகத்தை மீட்க; திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கை முழக்கங்களைத் தாங்கி களமாடிய ஆயுதமாக திகழ்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வந்ததெல்லாம் செய்தி என்று இட்டு நிரப்பாமல், தனக்கான தனித்துவக் கொள்கை வரையறையை வகுத்துக் கொண்டு, தேசத்தின் நலன், உழைக்கும் மக்களின் உயர்வு, தமிழர் உரிமை, தாய்மொழியின் மேம்பாடு போன்ற கொள்கைச் செய்திகளுக்கு குரல் கொடுத்து, சுடச்சுட செய்தி வழங்கும் நாளிதழ் வைரவிழாவையும் வசந்தமாய்க் கடந்து, பவளவிழா, அமுதவிழாவையும் பாங்குடன் கண்டு, நூற்றாண்டிலும் நுழைந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆரம்ப காலங்களில் ஜனசக்தியைப் பற்றி தோழர் ஜீவா, ஒவ்வொரு இதழும் பிரசவ வலியோடுதான் வெளிவருகிறது என்று கூறியதாக குறிப்பிடுவார்கள். முதலாளித்துவச் சூழலில் ஆழ்ந்த பொருள் கொண்ட வார்த்தைகள் இவை. தோழர் லெனின், இஸ்க்ரா(தீப்பொறி) என்ற ஏட்டினை துவக்கியபொழுது ‘இஸ்க்ரா பத்திரிகை தோழர்களை அரசியல்படுத்தும் எழுச்சியூட்டும் அமைப்பாய்த் திரட்டும்’ என்றார். இடது சிந்தனை கொண்ட பத்திரிகைகள் யாவற்றுக்கும் அதுதான் திசைவழி. அந்த திசைவழியில் பயணிக்கும் தீக்கதிருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நக்கீரன் கோபால்

தீக்கதிர் வைரவிழா சிறப்பு மலர் வெளியீட்டை யொட்டி சக பத்திரிகை  ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நக்கீரன் ஏட்டின் ஆசிரியர் நக்கீரன் கோபால் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் ஆண்ட போதும், அரசியல் காட்சிகள் அரங்கேறிய போதும், தன்னை மக்களின் பாதுகாவலனாக நிலைநிறுத்திக் கொண்டு தொடர்ந்து சமரசமின்றி களமாடி வந்திருக்கிறது தீக்கதிர். எனவே வரலாற்றில் தடம் பதிக்கும் பயணமாக தீக்கதிரின் பயணம் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.






 

;