பிறப்பிலே ஆண்பெண் வேற்றுமை இல்லை
பெருமை கொள்வது பாலால் இல்லை!
சிறப்பிலே ஆண்பெண் வேற்றுமை இல்லை
சிந்தனைப் பிழையால் வந்தது தொல்லை!
பெண்தான் உலகின் படைப்பின் இறைவி
பெண்தான் உலகைக் காக்கும் கருவி!
பெண்கள் முயன்றே எதிலும் வெல்வார்
பேரிடர் கண்டால் அதனைக் கொல்வார்!
சக்தியின் வடிவம் பெண்ணாய் ஆகும்
சக்தி இல்லை பிணமாய்ப் போகும்!
சக்தி இலாதவன் சலனமற் றிருப்பான்
சக்தி இருந்தால் வளமுற் றிருப்பான்!
கல்வியில் கேள்வியில் கலைகளில் பெண்ணே
காட்சியில் மாட்சியில் காண்பவள் பெண்ணே!
நல்வினை ஆற்றலை நாட்டுவாள் பெண்ணே
நாடு செழித்திட ஆய்பவள் பெண்ணே!
பெண்களின் அறிவுக் கூர்மை உடையது
பெண்களின் கல்வி பெருமைக் குரியது!
பெண்களின் ஆற்றல் விண்ணை எட்டும்
பெண்களின் ஞானம் யாருக்குக் கிட்டும்?
பெண்ணை அடிமைப் படுத்தினால் கேடு
பெண்ணின் விடுதலை உயர்ந்திடும் நாடு!
கண்ணாய்ப் பெண்ணைப் போற்றும் உலகம்
காட்சியில் சிறந்து ஒளியே நிலவும்!
பெண்கள் போகப் பொருளும் இல்லை
பிள்ளை பெற்றிடும் இயந்திரம் இல்லை!
பெண்கள் அடுக்களை அடிமை இல்லை
பெண்கள் வீட்டைச் சுமப்பவள் இல்லை!
ஆணொடு பெண்ணை சமமாய் அமைப்போம்
ஆதிக் கமில்லா அன்பிலே சமைப்போம்!
வான்தொடு புகழிலே பெண்களைச் சேர்ப்போம்
வைய அறிவினில் சமத்துவம் ஆர்ப்போம்!