tamilnadu

img

பொது வாழ்வின் புகழ் நிலவு லீலாவதி

மதுரை தந்த மாணிக்கம், வில்லாபுரம் பெற்றெடுத்த வீரத்தாய், தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க தன்னுயிர் தந்த தியாகி, பொதுவாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு, அர்ப்பணிப்பு உணர்விற்கோர் அடையாளம், செங்கொடியின் நிழலில் வளர்ந்த செந்தாமரை வீராங்கனை லீலாவதியின் நினைவுநாள் இன்று.22 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மாமன்ற உறுப்பினராகி தான் வெற்றிபெற்ற வார்டில் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனையை நிறைவேற்ற கடும் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்.வெள்ளையர்களை எதிர்த்த போராட்டத்திலும் முன்நின்ற தாய்மார்கள் எத்தனையோ பேர். சுதந்திர இந்தியாவில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க போராடி சிறை சென்ற தாய்மார்கள் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், மூவலூர் இராமாமிர்தம் உள்ளிட்ட எத்தனையோ பேர்.சமூக மாற்றத்திற்காக போராடி போராளிகளாகவே வாழ்ந்து மறைந்த சாவித்திரி, ஜோதிராவ் பூலேக்கள் எத்தனையோ பேர்.


அந்த வழியில் வந்தவர் தான் மதுரை லீலாவதி. தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்போர் கடுகைப்போன்ற சிறு உள்ளம் படைத்தவர் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இதற்கு மாறாக, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன்னலம் மறுத்து இளைஞர் இயக்கத்தில் இணைந்து, தான் சார்ந்த கைநெசவு தொழிற்சங்கத்தில் செயலாற்றி, மதுரை பொதுவுடைமை இயக்கத்தின் இளம்தலைவராக பரிணமித்து மாமன்ற உறுப்பினராக மலர்ந்து மக்கள் சேவையே உயிரெனக் கொண்டு வாழ்ந்தவர். இதனால் தான் அவரை தேர்ந்தெடுத்த அந்த வட்டாரம் தங்கள் வீட்டின் தலைமகளாக பாவித்து, உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்தனர்.


வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்


உருகி ஓடும் மெழுகைப் போல


ஒளியை வீசலாம்


யாருக்கென்று அழுதபோதும்


தலைவனாகலாம்


என்ற கவியரசு கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளைப் போல வாழ்ந்து காட்டியவர் லீலாவதி.லீலாவதியின் தியாகம், அவருடைய போர்க்குணம், அளப்பரியது. எதற்கும் கலங்காத மனம், உருக்கு போன்ற உள்ளம் கொண்ட வீராங்கனை லீலாவதி. பொதுமக்கள் உள்ளத்திலும், பொதுவாழ்வில் நேர்மையை விரும்புபவர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருப்பார்.




;