tamilnadu

img

கோழை மனிதனும் அவனது எதிரியும்

(சோமாலியா)
ஆங்கிலம் வழி தமிழில்
உதயசங்கர்

இகால் சிதாத் ஒரு கோழை. அவனைப்பற்றி சோமாலியாவில் ஏராளமான கதைகள் உண்டு. இகால் நாடோடியாக வாழ்ந்து வந்தான். ஒட்டகங்கள், ஆடு, மாடுகள், கோழிகள் ஆகியவற்றை வளர்த்து, அவற்றில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்தான். உண்மையில் நாடோடி வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் நிறைய எதிரிகள் இருப்பார்கள். இனங்களுக்குள் சண்டை நடக்கும். இகால் ஒரு கோழை. அவன் இந்தச் சண்டைகளை வெறுத்தான். ஒரு நாள், இகால் அவனுடைய சிறிய கூடாரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கிராமத்துக்குள் எதிரிகள் நுழைந்து விட்டார்கள் என்று செய்தியை அவனுடைய மனைவிக்குத் தெரிந்தது. அந்த எதிரிகள் இகால் இனத்தைச் சேர்ந்த எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று வந்திருந்தார்கள். உடனே மனைவி, அவளுடைய கணவனிடம் ஓடிச் சென்று இந்த மோசமான செய்தியைத் தெரிவிக்க ஓடினாள். சண்டைக்குத் தயாராகும்படி சொல்வதற்காக விரைந்தாள். “இகால் எழுந்திரியுங்கள்.. அடுத்த நகரத்திலிருந்து எதிரிகள் நம்மைத் தாக்குவதற்கு வந்து விட்டார்கள்.. விரைவில் வந்து விடுவார்கள்..” என்று அவள் சொன்னாள். இகால் மனைவி சொன்ன கதையை நம்பவில்லை. அவன், “நீ ஏன் எப்போதும் என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாய்? பயங்கரமான கதைகளைச் சொல்கிறாய்?” என்றான். ஆனால் இகாலின் மனைவி, தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டேயிருந்தாள். “இது ஒன்றும் தேவதைக் கதை இல்லை.. உன்னை பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை…. ஆனால் உண்மையில் வந்து விட்டார்கள்.. நம்முடைய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிரிகளின் தாக்குதலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. நீ தான் அனைவரின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க வேண்டும்..” தன்னுடைய குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதை இகால் மறந்து விட்டான்.

தன்னைப் பற்றியே கவலைப் பட்டான். எப்படி எதிரிகளிடமிருந்து தான் தப்பிப்பது என்பதைப் பற்றியே யோசித்தான். இப்படி இகால் யோசித்துக் கொண்டிருக்கும்போது எதிரிகள் அருகில் நெருங்கி விட்டார்கள்.கிராமத்து மக்கள் அலறினார்கள். உடனே அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனை ஒரு பாயில் சுருட்டச் சொல்லி மனைவிடம் கட்டளையிட்டான். பிறகு, அவளுடைய கணவன் இறந்து விட்டதாக எதிரிகளிடம் அழுது புலம்பும்படிச் சொன்னான். அவனுடைய மனைவியும் அப்படியே செய்தாள். ஆனால் இகாலுக்கு திருப்தி இல்லை.  “இன்னும் சத்தமாக அழு.. அப்போது தான் எதிரிகள் நீ உண்மையிலேயே அழுகிறாய் என்று நம்புகிறார்கள்..” என்று சொன்னான். கடைசியில் எதிரிகள் வந்தே விட்டார்கள். இகாலின் மனைவியிடம், “என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அவள் தன்னுடைய கணவன் இறந்து விட்டதாகவும் அதனால் அவள் அழுவதாகவும் சொன்னாள். அப்போது எதிரிகள் கேட்டார்கள், “எப்போது அவன் இறந்தான்?” ஆகா! இதைப் பற்றி இகாலும் அவனுடைய மனைவியும் யோசிக்கவேயில்லையே. இகாலின் மனைவி பதில் சொல்ல வாயெடுத்தாள். அதற்கு முன்பே, இகால் சுருட்டப்பட்ட பாய்க்குள்ளிருந்து, “நேற்று இறந்ததாகச் சொல்லு..” என்று சொன்னான். அந்த நிமிடத்தில் இகால் உயிருடன் ஒளிந்திருக்கிறான் என்று எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு கோழையாக இருக்கிறான் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு அவர்கள் சொன்னார்கள், “முட்டாள்! தன்னுடைய குடும்பத்தையும், உடமைகளையும் பாதுகாக்கத் துணிவு வேண்டாமா? நீ மனிதனே இல்லை.. நீ ஏற்கனவே இறந்து விட்டாய்.. அதனால் இப்போது உயிரோடு இருந்து விட்டுப் போ.. மக்கள் உன்னை இறந்த மனிதன் என்று சொல்வார்கள்..” அவர்கள் அந்தக் கூடாரத்தை விட்டு வேகமாக அகன்றார்கள்.

;