tamilnadu

உண்மை விசுவாசிகளுக்கே தெரியும்?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 2 கோடியே 80 லட்சம் மக்களுக்கு பொங்கல் சிறப்புத் திட்ட தொகுப்பு நிதி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குதல் ஆகியவற்றை செய்து முடித்துள்ளது.அப்படிப் பார்க்கப்போனால் மொத்தக் கணக்கில் 2 கோடியே 80 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் ஓட்டு போட்டாலே அதிமுக 3-ல் 2 பங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்றார்.


இதை கேட்ட ஒரு ரத்தத்தின் ரத்தம், உண்மை நிலவரம் தெரியாம கணக்கு போடுறாரே இவெரெல்லாம் வச்சுக்கிட்டு எப்படித்தான் தேர்தலில் ஜெயிக்கப் போறோமோ என்று முணுமுணுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தார்.தமிழ்நாட்டில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய போது அந்தப் போராட்டத்தை ஒடுக்கியதையும் அவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டியதையும் அவர்கள் இன்னும் மறந்துவிடவில்லை. நானூறுக்கும்மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டது, கஜா புயல் பாதிப்பின்போது கடும் துயரத்திற்கு உள்ளானது, இன்னும் நிவாரணம் கிடைக்காமல் கிராம மக்கள் புலம்பித் தவிப்பது என்பதெல்லாம் இன்னும் டெல்டா மக்களிடமிருந்து மறைந்து விடவில்லை. தமிழக காவல்துறையில் பல்வேறு பிரச்சனைகளையொட்டி ஏராளமான காவல்துறை யினர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டனர்; தமிழகம் முழுவதும் உள்ள 8 இலட்சம் காவல்துறை குடும்பங்களை சார்ந்தவர்கள் கடும் கோபத்தோடு இந்த தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். இன்னும் அரசின் சாதாரண வேலைக்குக்கூட லஞ்சமும் இடமாற்றலுக்கு லஞ்சமும் இப்படி பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் இந்த 17-வது மக்களவை தேர்தலையும் 18-சட்டமன்றத்தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் பரிசாக வரும் ஏப்-18ந் தேதி மத்திய மோடி அரசையும் மாநில எடப்பாடி அரசையும் தூக்கி எறியப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை அதிமுகவின் உண்மை விசுவாசிகளே புரிந்துகொண்டுள்ளனர்! 


ஐவி.நாகராஜன்



;