டிசம்பர் டிஸாஸ்டர் மாதமா? சேதங்களின் மாதமா?
மனிதர்களின் மதவெறிக்கும் சுரண்டலின் கொடூரத்துக்கும்
சாதிவெறியின் குரூரத்துக்கும் மாதம் என்ன செய்யும்?
நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்?
நாமமது மனிதர்கள் என்று திரியும் உன்மத்தர்களின்
கொலைவெறிக்கும் கும்பல் கொடுமைகளுக்கும்
மாதத்தின்மேல் ஏன் பழி? மாதம் என் செய்யும்?
போபால் விஷவாயுக்கசிவால் கொத்துக் கொத்தாய் மக்கள் செத்து வீழ்ந்தது
அமெரிக்க கம்பெனியின் லாபவெறியால் அல்லவா?
அயோத்தியின் பாபர் மசூதி அடியோடு இடிபட்டது
இந்துத்துவ மதவெறிக்கும்பலின் கரசேவை கோரத்தாண்டவம் அல்லவா?
சுனாமிக் கொந்தளிப்பால் சுழன்றடித்த சூறாவளிப்புயலால்
நிலையைத் தலை கீழாய்மாற்றிய புழுதியில் புரட்டிப் போட்ட
பூகம்பம் நிலநடுக்கம் இயற்கையின் சீற்றமல்லவா?
மனிதர்களின் துரோகத்துக்கு இயற்கையின் எதிர்வினை எச்சரிக்கையல்லவா?
புவிக்கோளை பாதுகாக்க மனித குலத்துக்கு விடுத்த மறைமுக அறிகுறியல்லவா?
நிலப்பிரபுத்துவச் சாதிய சுரண்டலின்
கொடூர குரூர கொலைவெறித் தாண்டவமல்லவா
வெண்மணியின் நாற்பத்துநான்கு கண்மணிகளை
ஒரு குடிசைக்குள் அடைத்து உயிரோடு கொளுத்தி கரிக்கட்டையாக்கியது
இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளோ
டிசம்பரில் நடந்தாலும் மாதம் என் செய்யும்?
மனிதர்களின் நேயமிழந்த நெறிகெட்ட தீச் செயல்களுக்கு
டிசம்பர் மாதம் என் செய்யும்?
மனிதர்களின் திரிந்த மனநிலையைக் கண்டு
அடியோடு அகற்றிட முயல்வதே ஆறறிவு கொண்ட
அன்பு வழிநின்ற அறச்செயல் செய்ய
வழிகாட்டுவதே திசை காட்டுவதே டிசம்பர் மாதம்.
அல்லவை அகற்றி நல்லவை போற்றி
சகலருக்கும் சம வாய்ப்பு சமத்துவ வாழ்க்கைக்கு
நடை போடச் சொல்லுமே டிசம்பர்
சேதங்களின் மாதமல்ல - மனித சேமங்களின் மாதம்.
- ப.முருகன்