tamilnadu

தைப்பாவாய்

கவிஞர் தமிழ்தாசன் 

தண்டலைகள் பூப்பதுபோல் தமிழ்ப்புத் தாண்டென்னும்
தண்ணிலவாய் தைப்பாவாய் வந்தாய் - இன்று 
நின்னருமை முழங்கிடவே நித்திரையில் நீந்தாமல் 
நெஞ்சமெலாம் உணர்வெழுப்பி வந்தாய்!

வையத்தில் நற்றமிழர் வாழ்வொளிர வாழ்த்திடவே; 
வளமுடனே தைப்பாவாய் வந்தாய் - இன்று 
நெய்மணக்கும் பொங்கலாலே மெய்விழாவைக் கொண்டாட 
நெஞ்சினிக்கத் தைப்பாவாய் வந்தாய்!

சீர்மலிந்த எம்பகைவர் சிந்தையினைப் பண்படுத்த 
சீர்மிகுந்த தைப்பாவாய் வந்தாய் - இன்று
பாரிடையே செம்மொழியைப் பறைசாற்றி மாண்புடனே 
பாமகளே தைப்பாவாய் வந்தாய்!

தித்திக்கும் பொங்கலைப்போல் தேன்தமிழும் சீர்மிகவே;
திண்ணமுடன் தைப்பாவாய் வந்தாய்! – இன்று
எத்திக்கும் திருநாளை எம்தமிழர் இசைபாட
எழுச்சியுடன் தைப்பாவாய் வந்தாய்!