tamilnadu

img

புத்தகங்கள் நம்மை வழிநடத்தும்

புதுக்கோட்டை, ஜூலை 29 - புத்தகங்கள் நம்மை வழிநடத்தும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.  புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை ‘புத்தகங்களின் கைகள்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: புத்தகங்களும் கைகளைப் போலத்தான். சில புத்தகங்களின் கைகள் ஓர் ஆசிரியரைப் போல அறிவுரை வழங்கும். சில புத்தகங்களின் கைகள் கலங்கி நிற்கும் நேரங்களில் தோழனைப் போல ஆறுதல்படுத்தும். சில புத்தகங்கள் சாலையைக் கடப்பவனுக்கு வழிகாட்டுவதைப் போல நம்மை வழிநடத்தும்.  ஆம், எல்லாப் புத்தகங்களும் கைகளைக் கொண்டிருக்கின்றன. அந்தக் கைகளை நாம் எப்படிப் பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். மனிதன் கண்டுபிடித்ததிலேயே முக்கியமானது மொழி. அதனைத் தொடர்ந்து எழுத்து என்பது மிக முக்கியமான சாதனை. நமக்கு வள்ளுவன், இளங்கோ, கம்பன், கபிலன் போன்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், அவர்கள் இப்பொழுதும் எழுத்தால் நம்முடன்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கலையும், இலக்கியமுமே காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும். தமிழின் மொத்த இலக்கியங்களுமே பிரிவை மையமாகக் கொண்ட இலக்கியங்கள்தான். நட்பில் ஏதோ ஒன்று பிசகும்போது அது பிரிவுக்கு இட்டுச் செல்கிறது. சிலரின் பிரிவுகள் என்பது பிரிவு அல்ல. அது தற்காலிகமான இடைவெளிதான். இறந்து போனவர்களைக்கூட நினைவால் தக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் நம்முடைய மனதிலுள்ள கசடுகளை நீக்கி, நம்மைத் தூய்மையாக்கும். இலக்கியத்தைத் தாண்டி, அறிவியல், தத்துவம், சமகால சம்பவங்கள், வரலாறு ஆகியவற்றையும் படிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ‘மக்கள் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் பங்கு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் பேசினார். நிகழ்ச்சிக்கு, பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார்.