tamilnadu

img

கோவில்கள் தோறும் திருப்பணியாளர்களின் பொன்னடி படட்டும்.... சு.வெங்கடேசன் எம்.பி.,...

திருவரங்கத்தில் இராமானுஜர் புதிதாக மடம் ஒன்று கட்டினார். அந்த மடத்துக்கு முறைப்படியான கிரஹபிரவேசம் வைத்திருந்தார். 

அதற்கு முதல்நாள் பட்டியலினத்தைச் சேர்ந்த மாரநேரி நம்பி கூறியிருக்கிறார். “நாளை கிரஹ பிரவேசம் நடந்த பின் என்னை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். எனவே முதல் நாளே என்னை அந்த மடத்துக்கு அழைத்துச்செல்லுங்கள், இராமானுஜரின் மடத்தை நான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

அவரை இராமானுஜரின் சிஷ்யன் முதலியாண்டான் மடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.

இந்தச் செய்தியை அன்று மாலை முதலியாண்டான், இராமானுஜரிடம் தெரிவிக்கிறார், 

இராமானுஜரோ, “மாரநேரி நம்பி எல்லா இடத்துக்கும் போய் பார்த்தாரா?” எனக்கேட்டாராம்.

அதற்கு முதலியாண்டான் “ ஆம் “ என்று பதில் கூறியிருக்கிறார்.

“சமையலறைக்குப் போனாரா?” எனக் கேட்டாராம்.

“ஆம்” என்றாராம் முதலியாண்டான்.

“பூஜை அறைக்கு போனாரா?” எனக் கேட்டாராம்.

“ஆம்” என்றாராம் முதலியாண்டான்.

“ஒரு பரமபாகவதருடைய பொன்னடி பட்டதால் மடம் புனிதமடைந்துவிட்டது. எனவே நாளை கிரஹ பிரவேசம் தேவையில்லை” என்று இராமானுஜர் கூறியதாக “இராமானுஜரின் குரு பரம்பரை பிரபாவம்” கூறுகிறது.

ஆனால் சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடப்பது வியப்பாக இருக்கிறது.

வடமொழியை முதன்மையாகக் கொண்ட  வடகலை பட்டாச்சாரியார், தமிழை முதன்மையாகக் கொண்ட தென்கலை பட்டாச்சாரியாரை அர்ச்சகராக அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கிறார்.

சாத்தூர்  வெங்கடாசலபதி திருக்கோவிலில் காலியாக இருந்த பட்டாச்சாரியார் பணியிடத்தில் ஓய்வு பெற்ற பின்பும் 69 வயதான ரங்கநாத பட்டர், ஏழு வருடங்களாக தற்காலிகமாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்தக் காலி பணியிடத்திற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்ரீனிவாசன் என்ற தென்கலை பிராமணர் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இளைஞர்கள் இறை திருப்பணி  செய்திட அனுபவமிக்க சமயச் சான்றோர் வழிவிட்டு,வழிகாட்ட வேண்டும். ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யுரை பரப்புபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

;