tamilnadu

img

செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000

பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் வசிக்கும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வருகிற செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திங்களன்று (மார்ச் 20) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக (காகிதமில்லா) தாக்கல் செய்தார்.  நிதியமைச்சர் தமது உரையில், “சமூகநீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி,  பகுத்தறிவு ஆகிய நான்கு அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு, நம்  நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது” என்றார்.

பொருளாதார வளர்ச்சியை உயர்த்து தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்து தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்குதல், கல்வியின் மூலம் பெண்களின்  வாழ்வாதார மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் சமூகப்பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு,  தரவுகள் அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாகச் சென்ற டைவதை உறுதி செய்தல், சுற்றுச்சூழ லில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல். இவை அனைத்திலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டுள் ளோம் என்றும் அவர் கூறினார்.

தேசிய அளவோடு ஒப்பிடும்போது

தொடர்ந்து பேசிய அமைச்சர், “வர லாறு காணாத பணவீக்கம்,  உக்ரைனில்  தொடரும் போர், உலகப் பொருளாதாரத் திலும் நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம்.  தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில், நம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிகப்  பொருளாதார வளர்ச்சியை எய்தியுள்ள தோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக் குறையையும் ஒன்றிய அரசைவிடக் கணிசமாகக் குறைத்துள்ளோம்”என்றும் தெரிவித்தார்.

வருவாய் பற்றாக்குறை குறைப்பு

இந்த அரசு பதவியேற்கும்போது சுமார் ரூ. 62,000 கோடியாக இருந்த வரு வாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற் கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளோம்.  இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ ரூ. 5,000 கோடி குறைவாகும். வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் இலக்கை  எட்டிட,  அரசின் சமூக நலத்திட்டங்  களுக்கும் வளர்ச்சி முன்னுரிமை களுக்கும் எவ்வித பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்படும் என வும் அமைச்சர் கூறினார். தற்போது மாநிலத்தின் ஒட்டு மொத்த நிதிநிலைமையை பொருத்த மட்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம் குறைந்து வரும் போக்கைத் தடுக்க, வரி விகிதங்களை சீரமைத்தல், வசூலிப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடான 1,42,799.93 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது வரும் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரி  வருவாய் 1,81,182.22 கோடி ரூபாயாக மேலும் உயருமென்று மதிப்பிடப்பட்டுள் ளது. இது திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 19.30 விழுக்காடு அதிக மாகும். வரவு-செலவுத் திட்டத்தில் கணித்தவாறு, மாநிலத்தின் சொந்த வரி யல்லாத வருவாய் திருத்த மதிப்பீடு களிலும் ரூ. 15,309.40 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளை விட 32.10 விழுக்காடு உயர்ந்து, 20,223.51 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை யில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி யாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப் பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.  வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம், கலைஞரின் நூற்றாண்டான  இந்த ஆண்டில்,  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ்  மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறை கள் வகுக்கப்பட்டு விரைவில் வெளி யிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில்  ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.




 

;