உதயசங்கர்
கீச் கீச் கீச் கீச்
இன்று எனக்குப் பிறந்தநாள்.
சுறுசுறு சுண்டெலி கீச்சிட்டது.
இது எந்த இடம்?
சுண்டுவிரல் அளவு இருந்த சுறுசுறு சுண்டெலி வெளியில் எட்டிப் பார்த்தது. காதுகளை அங்கும் இங்கும் திருப்பி ஏதாவது சத்தம் வருகிறதா? என்று கேட்டது.
அமைதியாக இருந்தது.
மூக்கை முன்னால் நீட்டி வாசனை ஏதும் வருகிறதா? என்று முகர்ந்து பார்த்தது.
கறுப்புக்கண்மணிகளை உருட்டி யாராவது இருக்க்கிறார்களா? என்று தேடியது.
எந்த சத்தமும் இல்லை.
எந்த வாசனையும் இல்லை.
யாரும் அங்கு இல்லை.
இது எந்த இடம்?
சாக்கடை இல்லை.
பொந்துகள் இல்லை.
புதர்ச்செடிகள் இல்லை.
பலசரக்குக் கடை இல்லை.
ரயில் இல்லை.
இது எந்த இடம்?
ஒரு வீடு.
நேற்று ஒரு ரயிலில் இருந்தது.
இன்று ஒரு வீட்டில் இருந்தது.
பை திறந்திருந்தாலும் சுறுசுறு சுண்டெலி பையின் மூலையில் இருந்த ஓட்டை வழியே வெளியே வந்தது.
அந்த ஓட்டையை சுண்டெலி தான் போட்டது.
கூர்மையான முன்னம்பற்களால் பையின் மூலையில்
கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்தது.
இரும்பாக இருந்தாலும் கடித்து ஓட்டை போட்டுவிடும்.
சுறுசுறு சுண்டெலியின் பற்களுக்கு அவ்வளவு கூர்மை.
பற்கள் தேயத் தேய வளரும்.
வெளியில் வந்த சுண்டெலி அங்கும் இங்கும் ஓடியது.
டக் என்று நின்று கவனித்தது.
ஒரு துள்ளு துள்ளியது.
வீட்டில் யாரும் இல்லை.
வீட்டில் ஒவ்வொரு அறையாகச் சென்று சுற்றிப் பார்த்தது.
வரவேற்பறை
படுக்கையறை
கழிவறை
சமையலறை
சமையலறையில் நின்றது.
துள்ளிக்குதித்து சமையலறைச் சாமான்கள் இருந்த அலமாரியின் மீது ஏறியது.
ஒவ்வொரு டப்பாவின் மீதும் குதித்தது.
கடுகு டப்பா
உளுந்து டப்பா
துவரம்பருப்பு டப்பா
கடலைப்பருப்பு டப்பா
சர்க்கரை டப்பா
பொரிகடலை டப்பா
சீரகம் டப்பா
மிளகு டப்பா
வெந்தயம் டப்பா
ஊறுகாய் சாடி
அலமாரியின் ஒவ்வொரு அடுக்காகக் குதித்தது.
சிந்திக் கிடந்த பொரிகடலைத் துணுக்கைக் கொறித்தது.
காய்ந்து போன ரொட்டித்துணுக்கைக் கடித்தது.
பாய்ந்து போன குட்டிப்பாச்சாவைப் பிடித்துத் தின்றது.
வயிறு நிறைந்து விட்டது.
அவ்வளவுதான்.
ஆகா எனக்குப் பிறந்தநாள்
ஓகோ எனக்குப் பிறந்த நாள்
ஹேப்பி பர்த் டே டு மி
ஹேப்பி பர்த் டே டு மி
சுறுசுறு சுண்டெலி
ஓடியது. ஆடியது. பாடியது. சாடியது.
கிறுகிறு எனச் சுற்றியது.
ஹ்ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹா ஹாஹா
சிரித்தது.
திடீரெனச் சத்தம் கேட்டது.
கதவு திறந்தது.
விளக்கு எரிந்தது.
சுறுசுறு சுண்டெலியின் பிறந்த நாள் கொண்டாட்டம்
முடிந்தது.
அவ்வளவு தான்.
சுறுசுறு சுண்டெலி ஓடி ஒளிந்தது.