மதுரையில் பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ளலூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்று காலை பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து காலை 8.45 மணியளவில் வகுப்பிற்கு வந்த சக மாணவிகள், அறை உட்புறமாக பூட்டி இருப்பதை அறிந்தனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் பள்ளியை முற்றுகையிட்டனர். உயிரிழந்த மாணவியின் உடலை, அவரது உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் தடுத்ததால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.