tamilnadu

img

மன்னர் குடும்பத்து மகனும்... ஏழைத் தாயின் மகனும்...

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் பி.ஜே.பி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.மோடியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான வேடிக்கையான ஒன்று. என்னவென்றால், முதலில் நாங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றினோம்; இனி அவர்களது விருப்பங்களை நிறைவேற்ற போகின்றோம் என்கிறார். அதாவது மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற போகிறோம். மக்களின் விருப்பம் என்னவென்று தெரியுமா? நீங்கள் உடனே நீங்கள் வீட்டிற்கு போக வேண்டும் என்பது தான். மோடி அவர்கள் பிரச்சாரத்தில் இப்பொழுது புது முறையை கையாளுகின்றார். முதலைக் கண்ணீர் வடிக்கின்றார், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக திடீரென்று இப்பொழுது நான் ஏழைத் தாயின் மகன் என்று சொல்கின்றார். மீண்டும் சொல்லுகின்றார். ஏழைத்தாயின் மகனாக இருக்கக்கூடிய நான் இந்தியாவை ஆள்வது ராகுல் காந்திக்கு பிடிக்கவில்லை என்று ஒரு புது அர்த்தத்தை  கண்டுபிடித்து இப்பொழுது அவர் பேசிக்கொண்டிருக்கின்றார். நான் கேட்கின்றேன். ஏழைத்தாயின் மகன், ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றியிருக்கிறார். அதேபோல் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.


இதுதான் ஏழைத்தாயின் மகன் செய்யக்கூடிய காரியமா? இந்து பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டார்கள். என்ன செய்தி என்றால், மோடியின் மிகப்பெரிய மெகா ஊழல் ஒன்று. ரபேல் போர் விமான ஊழல். அந்த ஊழல் ஆதாரங்கள் விசாரிக்கப்படும் என்று நேற்றைக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கின்றது. அவர், தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லுகிறார் என்றால், ஐந்து வருடமாக எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்றார். அந்த அறிக்கை வந்த அடுத்த நாளே நீதிமன்றம் அதில் ஊழல் நடந்து இருக்கின்றது, அதை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.நான் கேட்கின்றேன். ராகுல்காந்தி மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று மோடி சொல்லுகின்றார். ராகுல் காந்தி அவர்கள் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் வருடத்திற்கு 72,000 ரூபாய் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வழங்குவோம் என்று அறிவித்திருக்கின்றார்.


ஏழைகளுக்காக வறுமை ஒழிப்பு திட்டம் என்கின்ற பெயரில் அதை அவர் அறிவித்திருக்கிறார். மன்னர் குடும்பமாக இருந்தாலும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்று அறிவித்திருக்கிறார். ராகுல் அவர்கள் மன்னர் குடும்பமாக இருந்தாலும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.வராக்கடன் கட்டமுடியாத விவசாயிகளுக்கு குற்றத்திலிருந்து இதில் விதிவிலக்கு வழங்கப்படும் அவர்கள் மீது குற்ற வழக்கு போடக்கூடாது அதையும் அவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.ஆனால் டீ விற்று பிரதமராக வந்த நீங்கள் ஏழைகளைப் பற்றி நினைக்காமல், விஜய் மல்லையாவுக்கு லலித் மோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொள்ளையடிக்க உதவி செய்யக்கூடிய வகையில் நீங்கள் ஈடுபடலாமா?


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ்.ஸ்ரீரமேஷ் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...

;