tamilnadu

img

திருபுவனம் காவல்நிலையச் சாவு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திடுக!

திருபுவனம் காவல்நிலையச் சாவு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திடுக!

பெ. சண்முகம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 30 - திருபுவனம் காவல் நிலையச் சாவு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலை மையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ. சண்முகம், “திருபுவனம் காவல்நிலைய படுகொலையை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இறந்துபோன அஜித்குமார் உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடுங்காயங்கள் இருந்ததை, விசாரணையில் மாஜிஸ்திரேட் உறுதி செய்துள்ளார். அஜித்குமார் தம்பி நவீன், தனது கண் முன்னே அஜித்குமார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை நேரடி சாட்சியாக கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து, உண்மையை மக்களுக்கு அரசு கூற வேண்டும்” என்றார். “திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மோதல் கொலை, காவல் நிலைய சாவு என 24 நிகழ்வுகள் நடந்துள்ளன. காவல்துறை சட்டப்படி செயல்பட வேண்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்துவது, என்கவுண்ட்டர் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மனித உரிமை மீறலில் சமரசம் கிடை யாது. இத்தகைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். இத்தகைய கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பெ. சண்முகம் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக தலைமையிலான அணியில் யார் இருக்க வேண்டும், கூடாது என்று முடிவெடுக்க வேண்டியது, திமுக தலைவராக இருக்கும் முதலமைச்சர் தான்” என்றார். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஎம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், தனி நீதிபதியின் உத்தரவு தவறானது; இயற்கை நீதிக்கு புறம்பானது என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மாறாக, வருவாய்த் துறை உள்ளாட்சி அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றுவது கண்டனத்திற்குரியது. விரிவடைந்த அமர்வுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை ஏற்று அதிகாரிகள் செயல்பட வேண்டும். நீதிபதி உத்தரவை மீறி செயல்படுவது சரியல்ல” என்றார்.