tamilnadu

img

நவீன இந்திய வரலாற்றின் வாழும் சாட்சியம் சங்கரய்யா - பினராயி விஜயன், கேரள முதல்வர்

பினராயி விஜயன், கேரள முதல்வர்

தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டையொட்டி தீக்கதிர் நாளேடு சிறப்பிதழ் வெளியிடுவது குறித்து எனது மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் சங்கரய்யா, நம் அனைவருக்கும் உற்சாகமூட்டக் கூடியவராகவும், வழிகாட்டக் கூடியவராகவும் திகழ்கிறார். அவருடைய நூற்றாண்டு கால வாழ்வு என்பது நவீன இந்திய வரலாற்றின் வாழும் சாட்சியமாகத் திகழ்கிறது. உயர் படிப்பை துறந்து, விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்ட காலத்திலிருந்து இன்றுவரை அவர் தன்னலத்தை முன்னிறுத்தாமல், மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி வந்துள்ளார். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 1964 ஆம் ஆண்டு வெளிநடப்பு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதிலும் அந்த உணர்வே பிரதிபலித்தது.

அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த 32 தோழர்களில் இருவர் மட்டுமே தற்போது நம்முடன் உள்ளனர். அவர்களில் ஒருவர் தோழர் சங்கரய்யா. திருத்தல் வாதம் மற்றும் இடதுசாரி அதிதீவிரவாதம் என்ற இரு போக்குகளையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அவர் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். கட்சி நலனுக்காகவும், இயக்கத்திற்காகவும் அவர் ஆற்றியுள்ள பணிகளும், செய்துள்ள தியாகங்களும் என்றென்றும் நினைவு கூரப்படும். தோழர் சங்கரய்யா போன்ற மூத்த தோழர்கள் கட்சிக்கு அமைத்துள்ள வலுவான அடித்தளத்தின் மீது நின்றுதான் என்னைப் போன்ற தோழர்கள் பிற்காலத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த அரும்பணிக்காக ஒட்டுமொத்த கட்சி அமைப்பும் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அவருடைய தியாகமும், தன்னலமற்ற தலைமைப் பண்பும், சோர்வடையும் காலங்களில் கூட அயர்வின்றி பணியாற்றி முன்னேறுவதற்கான உந்து சக்தியாக விளங்குகிறது. மூன்று முறை தமிழக சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், இரண்டு முறை கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக பணியாற்றியுள்ளார்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் என அவர் பல்வேறு பணிகளை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார். எட்டாண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கட்சிக்காக பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தும் பணியாற்றியுள்ளார். அவருக்கு இருந்த இலக்கிய ஆர்வம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தை தமிழகத்தில் உருவாக்கி வளர்ப்பதற்கு பேருதவியாக இருந்தது.

நூறாவது ஆண்டை எட்டியுள்ள தோழர் சங்கரய்யா அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்து நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த வயதிலும் கூட நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகுந்த விழிப்போடு கவனிப்பதையும், கட்சியின் நலனுக்காக கவனம் கொள்வதையும் அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு கேரள மக்கள் சார்பிலும், என்னுடைய சார்பிலும் நூற்றாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

;