tamilnadu

img

செங்கொடி இல்லையெனில் கிராமப்புற சமூக மாற்றம் நிகழ்ந்திருக்காது.... மதுரை விழாவில் கே.பாலகிருஷ்ணன் முழக்கம்....

மதுரை:
செங்கொடி இயக்கம் இல்லையெனில் தமிழக கிராமப்புறங்களில் சமூக மாற்றம் நிகழ்ந்திருக்காது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா,  எழுத்து, கலைத்துறையில் தடம் பதித்து வரும் ஆளுமைகள் என்.ராமகிருஷ்ணன், எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், பேராசிரியர் அருணன் ஆகியோருக்கு பாராட்டு விழா, மதுரை புறநகர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மூத்த தோழர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: 

இந்தியாவில் இடதுசாரிகளின் நிலை என்ன பலர் கேள்வியெழுப்பி அவர்கள் கருத்தை திணிக்க முயற்சிக்கின்றனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும்?. இந்தியா என்ற ஒரு நாடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் கம்யூனிஸ்ட்டுகள் தான். குறிப்பாக “வெள்ளையனே வெளியேறு”, “பரிபூரண சுதந்திரம் வேண்டும்” என்ற கோரிக்கையை சுதந்திரப் போராட்டத்தில் முன்னிறுத்துவதில்  கம்யூனிஸ்ட்டுகளின் குரல்கள் மட்டுமே ஓங்கி ஒலித்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசாக நீட்டிக்க வேண்டும் என்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்தியது.  இன்றை அரசியல் சூழ்நிலையிலும் அந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து நடத்துவார்கள்.
மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்பதற்காக போராடி, ரத்தம் சிந்தி கோரிக்கையை வென்றெடுத்தது கம்யூனிஸ்ட்டுகள் தான்.  தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென 1952-ஆம் ஆண்டே  சட்டமன்றத்தில் குரல் கொடுத்தது மட்டுமல்ல சட்டமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி ஆகியோரையே சாரும். 

செங்கொடி இயக்கம் இல்லையெனில் கிராமப்புறங்களில் சமூக மாற்றம் நிகழ்ந்திருக்காது. நிலப்பிரபுக்களின் ஆதிக்கம். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு, மேல்சாதி ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியது, போராடி வருவது கம்யூனிஸ்ட்டுகள் தான்.இந்தாண்டு நடைபெறவுள்ள குடியரசுதினத்தில் அடித்தட்டு மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் “போராட்ட நாயகர்களாக” பங்கேற்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்களே அந்தப் பேராட்டத்திற்கு வித்திட்டது அகில இந்திய விவசாயிகள் சங்கம்.

மத்திய அரசின் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளுக்கு தமிழகத்தில் அதிமுக அரசு துணை போகிறது. அதிமுக துணையோடு தமிழகத்தில் காலுன்ற பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் பாஜக காலுன்றக் கூடாது. அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக-வுடன் தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும் இடமில்லை. அந்தக்கடமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கே உரித்தான அணுகுமுறையோடு தேர்தலில் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

;