tamilnadu

மோடி வருகையால் மதுரையில் மக்கள் அவதி

மதுரையை சுற்றியுள்ள நாடாளுமன்றத்தொகுதி அதிமுக அணி வேட்பாளர்களுக் காக வாக்குச் சேகரிக்க மோடி கடந்த இரண்டு நாட்களாக மதுரை பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அதையொட்டி, அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் பொதுமக்கள், முதியோர்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் ஆகியோர்சாலையின் ஓரமாக பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி நிறுத்தி வைக்கப்பட்டனர்.சித்திரை மாதம் துவங்கவுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக உள்ளது.பிரதமரின் வருகையையொட்டி கொளுத்தும்வெயிலில் பொதுமக்களை இப்படி நிறுத்துவது சரியா என்ற புலம்பல் மோடி செல்லும் வழியெங்கும் கேட்டது.நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளையும், மக்களையும் பார்த்து சிரிக்கக் கூடமனமில்லாமல் ஏ.சி. குளு குளு காரில் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு மோடி சென்றுகொண்டிருப்பதை இரண்டு நாட்களாகமதுரை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார் கள்.ஆண்டாள்புரம் அருகே சனிக்கிழமை காலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும்மேலாக பேருந்துகளையும், இதர வாகனங்களையும் நிறுத்தி வைத்து பொதுமக்களை அங்குமிங்கும் அசையவிடாமல் கெடுபிடி செய்து கொண்டிருந்தது காவல்துறை. கொதிப்பின் உச்சத்திற்கு சென்ற பொதுமக்கள் ‘‘நாங்கள் பார்க்காத பிரதமரா... இந்திரா காந்தி, ராகுல் காந்தி, வி.பி.சிங், மன்மோகன் சிங் போன்ற பல பிரதமர்கள் மதுரை மண்ணிற்கு வந்துள்ளனர். அவர்களெல்லாம் பொதுமக்களோடு கையசைத்துக்கொண்டு இணக்கமாக செல்வதைத்தான் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட பிரதமரை இப்பொழுதுதான் பார்க்கிறோம்’’ என்று புலம்ப ஆரம்பித்தனர். வெயில் ஏற, ஏற மக்கள் ஓரமாக நடக்கஆரம்பித்தால் கூட, அவர்களை ஆபாசவார்த்தைகளை சொல்லி திட்டிக்கொண்டிருந்தது காவல்துறை. காவல்துறையா அல்லது மோடியின் ஏவல்துறையா என்று மக்கள் கொதித்தெழுந்தனர். கிடைக்கிற பத்து ஓட்டும் இனிமேல் மோடிக்கு கிடைக் காது என்றனர்.வெள்ளியன்று இரவு 10.30 மணியளவில் மோடி பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கச் செல்லப்போகிறார் என காரணம் சொல்லி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களையும், பேருந்துகளையும் நிறுத்தி வைத்துவிட்டனர். நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் தனதுபச்சிளங்குழந்தைக்கு இரண்டு இட்லி பொட்டலத்தோடு பழங்காநத்தம் ஜங்சன் சந்திப்பில் ஒரு மணி நேரமாக நின்று கொண்டிருந்தார். ‘‘பிரதமர் ஓய்வு எடுக்கச் செல்வதற்காக என்னை இந்த ரோட்டைக்கூட கிராஸ் செய்ய போலீஸ்காரர்கள் விடமாட்டேன் என்கிறார்கள். என் குழந்தை பட்டினியில் அழுது கொண்டிருக்கிறது’’ என்றார்.மோடியின் வருகையால் மதுரை மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மோடிக்கு எதிரான கருத்து மதுரை மக்களின் மத்தியில் வலுவாக வேரூன்றி உள்ள நிலையில், இரண்டு நாள் நிகழ்வுகள் இன்னும்கோபத்தை தூண்டியுள்ளது.

;