முன்னொரு காலத்தில் பிரான்ஸ் நாட்டின் பெரும் பகுதியை ஒரு ராஜா ஆண்டு வந்தார். காசை விட்டெறிந்தால் வாங்கக்கூடிய அனைத்துவிதமான ஆடம்பரப் பொருள்களையும் அவர் பெற்றிருந்தார். இவ்வாறாக அனைத்துவிதமான சுகபோக வாழ்க்கையுடன் அவருக்கு மிகவும் அழகான மகள் ஒருவரும் இருந்தார். அந்த நாட்டில் அவரைப்போன்று அழகி வேறெவரும் கிடையாது. இவ்வளவு சுகபோக வாழ்க்கையும், மிக அழகான மகளும் இருந்தபோதிலும் அந்த மன்னன் எப்போதும் சிடுசிடுப்புடனேயே காணப்பட்டார். ஏனென்றால் அவருக்கு நிலத்திலும் நீரிலும் செல்லக்கூடிய கப்பலைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற ஓர் ஆசை. அந்த ஆசையை அவரால் நிறைவேற்ற முடியாததால் அவர் எப்போதும் மனவருத்தத்துடனேயே காணப்பட்டார்.
இறுதியாக, அவர் ஒரு முடிவுக்கு வந்து, அதைப் பிரகடனம் செய்தார். நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய கப்பல் ஒன்றைக் கொண்டு வருபவருக்குத் தன் சொத்தில் பாதியைக் கொடுப்பதோடு, தன் மகளை யும் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதாக, அறிவித்தார். அரசரின் இந்த செய்தியை, அவரு டைய வீரர்கள் நாட்டின் அனைத்துக் கிராமங்களுக்கும், மக்கள் கூடும் அனைத்து சந்தைகளுக்கும் எடுத்துச் சென்றார்கள். ஆனாலும், இதனைக் கேட்ட மக்களில் எவருக்கும் அரசரின் ஆசையை எப்படிப் பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை. நாட்டின் கடைக்கோடியிலிருந்த காட்டின் அருகில் விறகு வெட்டி ஒருவரின் மூன்று மகன்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் ஜீவனத்திற்காக நாள் தோறும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். அரசர் அறி வித்த இந்த செய்தி அவர்கள் காதுகளுக்கும் எட்டியது. இதனைக் கேட்டபின்னர், இவ்வாறு ஒரு கப்பலைச் செய்து தந்தால் அழகான இளவரசியும் கிடைப்பார், அர சரின் சொத்தில் பாதியும் கிடைக்குமே என்று மூன்று சகோதரர்களுமே நினைத்தார்கள். முதலில் மூன்று சகோதரர்களின் மூத்தவன், ஒரு கோடரியையும், உணவுக்காக ரொட்டி, பால், பாலா டைக்கட்டி முதலானவைகளையும் எடுத்துக்கொண்டு காட்டின் உட்பகுதிக்குள் சென்றான். காட்டிற்குள் ஓங்கி வளர்ந்திருந்த ஓக் மரத்தைத் தேர்ந்தெடுத்து அதனை வெட்டத் தொடங்கினான். அவன் கடினமாக வேலை செய்தபின் அந்த மரம் சாய்ந்தது. தன்னுடைய உழைப் பினால் கிடைத்த வெற்றியால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் அங்கே மரத்தடி ஒன்றின்கீழ் அமர்ந்து தான் கொண்டுவந்த ரொட்டி, பால், பாலாடைக்கட்டி முதலானவற்றை உண்ணத் தொடங்கினான். அப்போது, அவன் அமர்ந்திருந்த மரத்தடியின் மரக் கிளை ஒன்றில் ஒரு மந்திரப் புறா வந்தமர்ந்தது. பின்னர்அது கிளைக்குக் கிளைத் தாவிக்கொண்டே, இவனிடம், “எனக்கும் கொஞ்சம் உணவு கொடு”, “எனக்கும் கொஞ்சம் உணவு கொடு”, என்று கேட்டுக் கொண்டே இருந்தது.
இவன், “எனக்கே உணவு போதாது, சத்தம் போட்டுக் கொண்டிருக்காதே, அப்பால் போய்விடு” என்று கூறினான். பின்னர் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கினான். ஆனாலும், புறா அவனை விட்டுவிடவில்லை. அவன் அருகில் வந்து உட்கார்ந்தது. பின்னர் அவனி டம், “இவ்வளவு அழகான மரத்தை வெட்டி நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டது. “நான் என்ன செய்தால் உனக்கு என்ன?” என்று கோபத்துடன் சத்தம் போட்டான். பின்னர் கேலியாக, “நான் இதில் கரண்டிகள் செய்யப் போகிறேன்” என்று கூறினான். புறா, “கரண்டிகள், கரண்டிகள், கரண்டிகள்” என்று கத்திக்கொண்டே பறந்து சென்றுவிட்டது. பின்னர் அவன் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுவிட்டு, மீண்டும் தன் வேலையைத் தொடங்கி னான். இப்போது அவன் தன் கோடரியால், கீழே சாய்ந்திருந்த மரத்தை வெட்டத் தொடங்கியபோது, ஒவ்வொரு துண்டும் கரண்டியாகவே வந்து விழுந்தன. அவன் வேகமாக வெட்டும்போது, கரண்டியும் வேக மாக வந்து விழுந்தது. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றிலும் கரண்டிகள் மயம்தான். சிறிய கரண்டிகள், நடுத்தரக் கரண்டிகள், பெரிய கரண்டிகள் எனப் பல வகையான கரண்டிகள். பின்னர் அவன் விரக்தியுடன் கோடரியைக் கீழே போட்டுவிட்டு, வீட்டிற்குத் திரும்பி னான். “கப்பல் கட்டும் பணி என்னவாயிற்று?” என்று இதர இரு சகோதரர்களும் கேட்டார்கள்.
“எனக்கு ஒன்றும் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லை” என்று கூறினான். வேறு எதையும் அவன் கூறவில்லை. “இது போதும் எனக்கு” என்று இரண்டாவது சகோ தரன் கூறிவிட்டு, அடுத்த நாள் கோடரியுடனும், உணவு களுடனும் காட்டிற்குள் புறப்பட்டுச் சென்றான். தன் அண்ணனைப் போலவே அவனும் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தினான். பின்னர் உணவு உண்ண உட்கார்ந்த போது, நேற்று வந்ததைப்போலவே மந்திரப் புறா இன்றும் வந்தது. அவனிடமும் “எனக்கும் கொஞ்சம் உணவு கொடு” என்று கேட்டது. இவனும் தன் அண் ணனைப் போலவே அதனை விரட்டி அடித்தான். பின்னர் அந்த மந்திரப் புறா அவனிடம், “இவ்வளவு அழ கான மரத்தை வெட்டி நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டது. இவனும் தன் அண்ணனைப்போலவே அதனிடம், “நான் என்ன செய்தால் உனக்கு என்ன” என்று சீறிவிழுந் தான். பின்னர் கேலியாக அதனிடம், “இதில் நூல் நூற்கும் கதிர்கள் செய்யப்போகிறேன்,” என்றான். மந்திரப் புறா, “நூல் நூற்கும் கதிர்கள், நூல் நூற்கும் கதிர்கள்” என்று சொல்லிக்கொண்டே பறந்து சென்றது.'
பின்னர் இவன் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு, தான் வெட்டி வீழ்த்திய மரத்தை வெட்டத் தொடங்கினான். அப்போது ஒவ்வொரு வெட்டுக்கும் நூல் நூற்கும் கதிர் போன்றே வந்தது. சிறியதாகவும், பெரியதாகவும் ஏராளமான கதிர்களை வெட்டிப் போட் டான். பின்னர் விரக்தியுடன் வீடு திரும்பிய இரண்டாம வன், தன் அண்ணனைப் போலவே, தனக்கு “இளவர சியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான். வேறு எதுவும் கூற வில்லை. கடைசியாக மூன்றாவது சகோதரன் மிகவும் ஆர்வத்துடன் தன் அண்ணன்களைப் போலவே கோடரி யுடனும், உணவு வகைகளுடனும் காட்டிற்குள் சென் றான். அவனும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். மதியத்தின்போது அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினான். பின்னர் உணவு அருந்த உட்கார்ந்தபோது, மந்திரப் புறா பறந்து வந்து அவன் அருகே அமர்ந்தது. அவ னுடைய அண்ணன்களிடம் கேட்டதுபோலவே அவனி டமும் “எனக்கும் கொஞ்சம் உணவு கொடு” என்று கேட்டது.
இவன் அவன் அண்ணன்களைப் போன்றவன் அல்ல. மிகவும் இரக்க சுபாவம் கொண்டவன். அதனை அருகே உட்கார வைத்து, இருவரும் இருந்த உண வைப் பகிர்ந்து உண்டனர். பின்னர் மந்திரப் புறா, அவனிடம், “இவ்வளவு அழகான மரத்தை வெட்டி நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டது. அதற்கு அவன், இந்த நாட்டின் அரசர், நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய கப்பல் ஒன்றின்மீது ஆசைப்பட்டிருக்கிறார் என்பதையும், அவ்வாறு ஒரு கப்பலைச் செய்து அவரிடம் கொண்டுசென்றால் அவர் தன் சொத்தில் பாதியைக் கொடுப்பதாக உறுதி அளித்திருப்பதோடு அவர் மகளையும் திருமணம் செய்து வைப்பதாகவும்கூறியிருப்பதையும் அந்த மந்திரப் புறாவிடம் தெரிவித்தான். உடனே அந்த மந்திரப் புறா, “நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய கப்பல், நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய கப்பல்” என்று கூறிக்கொண்டே பறந்து சென்றது. பின்னர் இளைய சகோதரன் மீண்டும் தன் வேலை யைத் தொடர்ந்தபோது, அவன் வெட்டிய ஒவ்வொரு துண்டும் கப்பலின் ஒவ்வொரு பாகமாக மாறியது. இறுதியில் நிலத்திலும் நீரிலும் ஓடக்கூடிய கப்பலும் உருவானது. இளம் விறகு வெட்டி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தான். பின்னர் அந்தக் கப்பலில் ஏறி, அதனை மன்னரின் மாளிகையை நோக்கி ஓட்டிச் சென்றான். போகும் வழியில் அவன் பலவிதமான மனிதர்களைச் சந்தித்தான். எலும்பும் தோலுமாய் இருந்த ஒருவன் தனக்கு அகோரப்பசியாக இருக்கிறது, ஏதேனும் உணவு தா என்று கேட்டான். இவன், “நான் அரண் மனைக்குத்தான் செல்கிறேன், என்னுடன் வா, அங்கே வாங்கித்தருகிறேன்” என்று கூறி அவனைக் கப்பலில் அழைத்துச்சென்றான். அதேபோன்று ஒயின் குடிக்கும் ஒருவன் தனக்கு ஒயின் கிடைக்காததால், ஆற்றில் ஓடும் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந் தான். அவனையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அடுத்து, மிகவும் பலசாலியாக இருந்த ஒருவன் காட்டில் வளர்ந்த மரங்களில் பாதியை வெட்டித் தன் முதுகில் சுமந்து சென்று கொண்டிருந்தவனை, விசா ரித்தபோது, எப்போதும் நச்சரித்துக்கொண்டிருக்கும் தன் சித்தி இவ்வாறு கொண்டுவரச்சொன்னதாகக் கூறி, எடுத்துச் செல்வதாகக் கூறினான். “சித்தியின் கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம், என்னுடன் அரண்மனைக்கு வா” என்று அவனையும் கப்பலில் ஏற்றி அழைத்துச் சென்றான். கடைசியாக அவர்கள் அனைவரும் அரண்மனை யைச் சென்று அடைந்தார்கள். இளம் விறகு வெட்டி, மன்னரிடம் நிலத்திலும் நீரிலும் ஓடும் கப்பலை ஒப்ப டைத்தான். அதனைப்பார்த்ததும் மன்னருக்கு மகா சந்தோஷம். ஆனாலும் ஒரு விறகு வெட்டியைத் தன் மருமகனாக ஏற்க அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எனவே அவனால் செய்ய முடியாது என்று தான் கருதிய சில சிரமமான வேலைகளை அவனுக்குக் கொடுத்தார்.
“என்னுடைய சமையலறையில் பத்து எருதுகள் வெட்டி, சமைக்கப்பட்டிருக்கின்றன. நீயும், உன்னு டன் வந்திருக்கும் உன் நண்பர்களும் அதனை இந்த இரவுக்குள் சாப்பிட்டால், நாளை உன் திருமணம் குறித்து நாம் பேசலாம்,” என்றார். இளைஞன், தன்னுடன் பசியோடு வந்தவனைப் பார்த்தான். அவன் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தான். ஒருசில நிமிடங்களில் அத்தனை எருதுக் கறியையும் சாப்பிட்டு முடித்தான். மன்னன் மயங்கி விழாத குறைதான். அடுத்து, “சாப்பிட்டபின், ஒயின் குடிக்க வாருங்கள். என்னு டைய பாதாள அறையில் பத்து பாரல்கள் ஒயின் பாட்டில்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் குடித்திட வேண்டும்,” என்று கூறினார். ஒயின் கிடைக்காது, ஆற்று நீரை அள்ளிக் குடித்துக் கொண்டிருந்த குடிகாரனின் தாகம் இதனால் நன்கு தீர்ந்தது. பத்து பாரல்கள் ஒயினையும் குடித்து, தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.
இப்போது மன்னருக்குக் கடும் கோபம் வந்து விட்டது. தன் வீரர்களை அழைத்து மூவரின் உயிரை யும் எடுத்துவிடுங்கள் எனக் கட்டளையிட்டார். இளை ஞனுடன் வந்த பலசாலி தன் பலம் என்ன என்பதை அந்த வீரர்களிடம் காட்டினான். அனைத்து வீரர்களையும் அடித்து நொறுக்கி, ஓடவிட்டான் மன்னருக்கும் கிலி பிடித்துவிட்டது. நிறுத்து, நிறுத்து, நாளை நீ என் மகளைத் திரு மணம் செய்துகொள். என்று கூறி மறுநாள் தன் மகளை விறகு வெட்டிக்குத் திருமணம் செய்து வைத்தார். தன் சொத்தில் பாதியையும் அளித்தார். அதன் பின்னர், இளம் விறகு வெட்டியும், இளவரசியும் அவனுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நன்றி: பப்ளிகேசன் டிவிசன் வெளியிட்ட ஆசிய நாடோடிக் கதைகள் என்னும் புத்தகத்திலிருந்து...