“வேண்டாம் போர் ; வேண்டும் சமாதானம்” குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
துளிர் அறிவியல் மையம் சார்பாக மதுரை மாவட்டம் தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள எடிசன் துளிர் இல்லத்தில் ஹிரோஷிமா, நாகசாகி (அணு குண்டு வெடித்த நகரங்கள் - ஜப்பான்) தின நிகழ்ச்சிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருமங்கலம் கிளையின் மேனாள் செயலாளர் இரா. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக நடத்திக் கொடுத்தார். துளிர் இல்ல மாணவர் சு. ப்ரித்திகா முன்னிலை வகிக்க, மாணவர் ரா.முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். 1945இல் ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத போர் முதல் இன்று இஸ்ரேல்- பாலஸ்தீனம் வரையிலான போர்களில் குழந்தைகளின் மரணம் மற்றும் அவல நிலை குறித்த மாணவர்களின் கருத்துக்களும் குறும்படங்களும் மாணவர்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டது. “வேண்டாம் போர் ; வேண்டும் சமாதானம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மாணவர்கள் போர் நிறுத்தத்திற்கான அடையாளமாக அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று, இறுதியில் ஊர் மந்தையில் பொதுமக்கள் மத்தியில் போரில் உயிர் இழந்த குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வை துளிர் அறிவியல் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.காமேஷ், வானவில் மன்றம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெ.ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக நடத்த உதவினர். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் வை. சிவப்பிரியா துளிர் இல்ல மாணவி நன்றி கூறினார் கனத்த இதயங்களுடன் போர் வேண்டாம் என்ற ஆழ் மனதுடன் மாணவர்கள் கலைந்து சென்றார்கள்.