tamilnadu

img

லட்சக்கணக்கானோர் மனிதச்சங்கிலி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பேரெழுச்சி 

சென்னையில் 37 கிலோ மீட்டர் நீண்டது

சென்னை, ஜன. 30- குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மனிதசங்கிலி இயக்கத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. நாட்டில் மதநல்லிணக்கத்தை பாது காக்க உயிர்நீத்த மாகத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30 மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் இந்த மனிதசங்கிலி இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா  தளம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்,  இஸ்லாமிய அமைப்புகள், மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

சென்னையில் 37 கி.மீ மனிதசங்கிலி

சென்னையில் திருவொற்றியூர் தேரடி முதல் தாம்பரம் வரை 37.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி நடைபெற்றது. மாணவர்கள், வாலிபர்கள்,  பெண்கள், வழக்கறிஞர்கள், மத்திய மாநில அரசு ஊழி யர்கள், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், ஆலைத் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  நகரின் மையப்பகுதியான  அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர் இந்து என்.ராம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர் க,பீம்ராவ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் நவாஸ்கனி எம்.பி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.

அரசியல் கட்சித்தலைவர்கள்

 பெரியார் சிலை அருகில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேரகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மருந்து  விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் ரமேஷ் சுந்தர், சைதை பனகல் மாளிகை அருகில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, நந்தனம் அருகில் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.வசந்திதேவி, குறளகம் அருகில் எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பார்க்கர், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.ராமகிருஷ்ணன், ராயபுரம் பாண்டியன் தியேட்டர் அருகில் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தங்க சாலை மணிக்கூண்டு அருகில்  முகம்மது அமீன், அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அண்ணா சாலை எஸ்ஐஇடி கல்லூரி பேருந்து நிலையம் அருகில் இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்புத் தலைவர் பாத்திமா லத்தீப், நந்தனம் அருகில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, சிபிஎம் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம், எல்.சுந்தர்ராஜன், ஜி.செல்வா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இஸ்லாமிய, கிறித்துவ அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் திராளாக  கலந்து கொண்டனர்.

தமிழகம்

மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன், ஈரோட்டில் புரவலர் கல்வியாளர் தாவூத் மியாகான், விழுப்புரத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி.,  தூத்துக்குடியில் மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி, தேனியில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது உள்ளிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மாண வர்கள், இளைஞர்கள், மாதர்கள் என மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். ஒரு மணி நேரம் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கட்டுக்கோப்புடன் அமைதியாக நடைபெற்றது.

கே.பாலகிருஷ்ணன் பேட்டி 

மனித சங்கிலியில் கலந்து கொண்ட பின்னர் சிபிஎம் மாநிலச்செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதவெறி சக்திகளால் எவ்வளவு ஆபத்து நிகழும் என்பதற்கு காந்தியின் படுகொலையே முன்னுதாரணம். மதச்சார்பற்ற தன்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் ஆபத்து ஏற்படுத்துகிற மதவெறி அரசியலை பாஜக அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத மத அடிப்படையில் குடியுரிமை வழங்குகிற அந்த திட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்தச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், அதிமுக மக்களவை உறுப்பினர்கள் இந்த சட்டத்தை ஆதரித்த தன் மூலம் தமிழக மக்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும், இந்திய மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது. மக்களவையில் ஆதரித்த பல கட்சிகள் இப்போது அதற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். எனவே தமிழக அரசும் சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்றார். 




 

;