tamilnadu

img

ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கம்

ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கம்

நீதிமன்ற உத்தரவை மீறி மதுபானக் கடைகள்

ருச்சிராப்பள்ளி, ஏப்.21-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிசெல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் தலைமையில் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுவில், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒய் ரோட்டில் புதிதாக ஸ்கை பார் மதுபானக் கடை மற்றும் கன்னிமார் தோப்பு பின்புறம் டாஸ்மாக் மதுபானக் கடை என இரண்டு கடைகளும் நீதிமன்ற உத்தரவை மீறி, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் டாஸ்மாக் விளம்பர போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திருப்புவதால், அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் இந்த இடத்தில் இரண்டு நாட்களில் 5 பேர் விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுபான கடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் கூறியிருந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் பூ மார்க்கெட்  இயங்கி வருகிறது. பூக்கள்  வியாபாரம் செய்யும் கடைக்கா ரர்கள், சாலையில் கடையை வைத்துக்கொண்டு அதனை ஆக்கிரமித்து தகர கொட்டைகள் அமைத்துக் கொண்டு பொது மக்கள், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்துக் கேட்டால், தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி வருகிறார்கள். மேலும், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி வருகின்றனர். எனவே, இதில் தலையிட்டு இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறியிருந்தார். ஸ்ரீரங்கம் பகுதிக்குழு உறுப்பினர் கோவிந்தன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் புற்றீசல் போல் முளைத்து வரும் அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் எவ்வித தரமும் இல்லாமல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி பெறப் பட்டு கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டி டங்களால், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுத்திட உட னடியாக ஆய்வு செய்ய உரிய நட வடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையிட கேட்டுக் கொள்கிறோம் என கோரியிருந்தார். கோபுர வாசல் திறக்க... பகுதிக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கீழவாசல் கோபுரம் சில வருடங்களுக்கு முன்பு சிதைந்து கற்கள் கீழே விழுந்தன. உடனடியாக நிர்வாகம் தலையிட்டு சாரங்கள் அமைத்து பொதுமக்கள் செல்லாதபடி கோபுர வாசல் பாதையை அடைத்தனர். இந்த கோபுர வாசலை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தார். பகுதிக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் சிங்கார பெருமாள் கோவில் வாசலில் அதிக அளவில் நிற்கும் மாடுகள் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளை முட்டித் தள்ளுகின்றன. பல பேர் காயமடைந்து வருகிறார்கள். இதுகுறித்து ஸ்ரீரங்கம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது, ஸ்ரீரங்கம் பகுதிக்குழு உறுப்பினர்கள் சந்துரு, வீரமுத்து, ரகுபதி மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.