tamilnadu

img

பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக உருவாக்குக! நியாய விலைக் கடை ஊழியர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக உருவாக்குக!

 நியாய விலைக் கடை ஊழியர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜுன் 30 -  தேர்தல் வாக்குறுதிப்படி தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியர் சங்க (சிஐடியு) மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு பி.கௌதமன், ஆ.சிபக்குமார், சா.கிருஷ்ணராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.  வரவேற்புக் குழுத் தலைவர் க.முகமதலி ஜின்னா வரவேற்றார். எஸ்.செல்வம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து ஆ.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். மாநில அமைப்பாளர் டி.பன்னீர்செல்வம் அறிக்கையை முன்வைத்துப் பேசினார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் உரையாற்றினார். தலைவராக பி.கௌதமன் (திருப்பூர்), செயலாளராக பி.செல்வராஜ் (புதுக்கோட்டை), பொருளாளராக கிருஷ்ணராஜா (தூத்துக்குடி), துணைத் தலைவர்களாக ஆர்.முனியாண்டி (விருதுநகர்), பி.சுரேஷ் (திருப்பூர்), ஜி.தெய்வநாயகம் (கன்னியாகுமரி), கே.சேதுராஜலிங்கபாண்டி (தேனி), ஏ.சிவகுமார் (சென்னை), உதவி செயலாளர்களாக கே.சிவகுமார் (கடலூர்), என்.செல்வம் (திருவாரூர்), கே.சேகர் (திண்டுக்கல்), ஏ.நாகராஜன் (நாமக்கல்), வி.நவநீதகிருஷ்ணன் (மதுரை) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.  வரவேற்பு குழுச் செயலாளர் பி.செல்வராஜ் நன்றி கூறினார். தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைக்கு பொருட்களை சரியான எடையில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.