tamilnadu

img

மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரத்தில் இயற்கை வேளாண்மையை உயிர்ப்பிக்க முயற்சி.....

நாட்டு ரக நெல், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களை மீட்ருவாக்கம் செய்து விவசாயிகளிடமும், மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கார்ப்பரேட்களின் கைகளிலிருந்து விவசாயத்தைப் பறித்து நாட்டு ரக விளைபொருட் களை உற்பத்தி செய்து சாமானிய மக்களுக்குஅதைக் குறைவான விலைக்கு வழங்கவேண்டு மென்ற முடிவிற்கு விவசாயிகள்  வந்துள்ளனர். அதனொரு பகுதியாக  ஒன்றுபட்ட  மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கி யுள்ளது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் சுமார் 170 நெல்ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச்சூழலில் வையை இயற்கை வேளாண்மை உழவர் கூட்டமைப்பு தலைவர் கருணாகரசேதுபதி “2001ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் ​​டெல்டா பகுதி 170 நாட்டு வகைகளைக் கண்டறிந்து சந்தைப்படுத்தியது போல, மதுரை பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள நாட்டு
விதை வகைகளையும் தேடச் சொல்லியுள்ளார்.

இந்த நிலையில் கீழடியில்  வையை இயற்கை விவசாயிகள் உழவர் கூட்டமைப்புசார்பில் நடைபெற்ற நிகழ்வில் சிவகங்கைஆட்சியர் மதுசூதனன் ரெட்டி முக்கியமான தகவலை பதிவு செய்தார். அதாவது, “இயற்கைவிவசாயிகளின் விளைபொருட்களை மேம்படுத்த அரசு உதவும் என்று  உறுதியளித் தார். அவர் மேலும் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசு  மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரி நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது என்றார்”.   விழாவில் பங்கேற்ற ஆட்சியருக்கு பனை ஓலையில் சுடப்பட்ட பனம் பழத்தை வழங்கி கெரளவித்தனர் விவசாயிகள்.


கருணாகர சேதுபதியின் (53) சொந்த ஊர்சிவகங்கை மாவட்டம் கணக்கன்குடி. வழக்கறிஞரான இவர் கடந்த பத்து வருடங்களாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். நான்காண்டுகளாக இயற்கை வேளாண் விவசாயத்தை ஊக்கப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இயற்கை வேளாண்மை மீட்டுருவாக்கம் குறித்து கருணாகர சேதுபதியிடம் பேசியபோது, கிடைத்த தகவல்கள்:-

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை உள்ளடக்கிய வையை இயற்கை உழவர் கூட்டமைப்பு  இப்பகுதியில் இழந்த பூர்வீக நெல் விதை வகைகளை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய முடிவு செய்தது.  அதற்கான தேடலை 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. இதற்கான அடிப்படைப் பணிகளை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கினாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எங்கள் கூட்டமைப்பில் உள்ள விவசாயிகளின் உதவியுடன் களப்பணிகளை செய்ய ஆரம்பித்தேன் என்றார் சேதுபதி.மேலும் அவர் கூறுகையில், “மரபு விதைகளை மீட்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிக்கிறோம். இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தில்லைநாயகம், அரை சம்பா, குரங்கு சம்பா, வையகுண்டான், மொழிக்கருப்பு, செம்மிளகி, மிளகுச்சம்பா, ஆணைக் கொம்பன், குள்ளகார், புழுதிக்கார், சிங்கினி கார், வரப்பு குடைஞ்சான், குழியடிச்சான்  உள்ளிட்ட 29 
ரகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதில் 23 ரகங்களை சேகரித்து மீட்டுள்ளோம். அத்தோடு அழிந்துபோன குள்ளயின மாடுகள், சிப்பிப்பாறை மற்றும் மண்டையின நாய்களையும் மீட்கமுயற்சிக்கிறோம். சேதுபதி மேலும் கூறுகையில், பனை விதைகள், எண்ணெய் வித்து மற்றும் பருத்தி வகைகளை மீட்டெடுக்கும் பணியிலும் இக்குழு ஈடுபட்டுள்ளது என்றார்.

ஐந்து இடங்களில் நெல் விதை உற்பத்தி
நடப்பாண்டில் 250 விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ வீதம் நாட்டு ரக நெல் வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் விதை உற்பத்தியை ஊக்குவிக்கத் திட்டமிட்டு மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தை அடுத்துள்ள டாக்டர் இராமலிங்கம், மதுரையைச் சேர்ந்த அருள்குமரன்,காரைக்குடியில் உள்ள சேதுபாஸ்கரா வேளாண்கல்லூரி உட்பட ஐந்து இடங்களில்விதை மறு உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. சாகுபடிக்கு மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களே பயன்படுத்தப்படும். ஏக்கருக்கு குறைந்தது 20 மூட்டை நெல் கிடைக்கும் என்றார்.எங்களது முயற்சிக்கு தமிழக அரசு ஒரு சிறிய உதவி செய்தால் போதும். நெல் தோலை உரிக்கும் இயந்திரம் ஒன்றியத்திற்கு ஒன்று வழங்கினால் போதும். மற்றவற்றை நாங்களே பார்த்துக்கொள்வோம் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

குழியடிச்சான் நெல் 
நெல் குழியடிச்சான் கடும்  வறட்சியையும் தாங்கி வளர்ந்து மகசூல் தரக்கூடியது. மழையை நம்பியும் ஆழ்குழாய் கிணற்றை நம்பியும் சாகுபடி செய்து, அந்த தண்ணீரும் இல்லாமல் போனாலும்கூட வறட்சியைத் தாங்கி மகசூல் தரும் நெல் ரகம் இது. உப்பு நிலத்தில்கூட நன்றாக வளரும். கடலோரப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் சாகுபடி செய்யக்கூடியது.புரட்டாசி மாதத்தில் நேரடியாக விதைத்து ஒரு மழை பெய்து நெல் முளைத்துவிட்டால் போதும். அதன் பிறகு குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும் குழியில் கிடக்கும் நீரைக்கொண்டு துளிர்விட்டு தூர் வெடிப்பதால் குழியடிச்சான் என்ற பெயர் வந்தது. இதற்கு குளிகுளிச்சான் என்றொரு பெயரும் உண்டு.ஏக்கருக்கு குறைந்தது 20 மூட்டை மகசூல் கிடைக்கும். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும். சாயும் தன்மை கிடையாது. இதை விதையாகவும் அரிசியாகவும் விற்பனை செய்யலாம்.

கருங்கண்ணி பருத்தி
நாட்டு ரக பருத்தியான கருங்கண்ணியை இக்குழு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.சிப்பிப்பாறை நாய் இனம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. அதை மீட்போம். இராமநாதபுரம் மாவட்டத்தின் சொத்தான மண்டையின நாய்களை  மீட்கும் பணியும் தொடங்கிவிட்டது.ஒவ்வொரு ஆண்டும் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு விழாக்களை நடத்துவது ஒரு திட்டமாக இருந்தாலும். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சென்று இயற்கை வேளாண்மை குறித்து விளக்கப்பாடம் எடுத்து விவசாயிகளை விழிப்புணர்வு பெறச் செய்வதேஎங்களது லட்சியம். கிராமத்தில் விவசாயி விளைவிக்கும் அரிசி குறைந்த விலையில் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும். கார்ப்பரேட்டு களின் கைகளிலிருந்து விவசாயத்தை காப்பாற்றஇந்த முயற்சி உதவும். இதை விவசாயிகளும் ஏற்பார்கள் என்றார் கருணாகர சேதுபதி.மேலும் நாட்டு ரக நெல் ரகங்களுக்கு விவசாயிகள் 9789242192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 ச.நல்லேந்திரன் 

;