கொரோனா-வால் மதுரையில் ஒரு பலியாகியுள்ளார். மேலும் இருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 144 தடையுத்தரவால் மக்கள் வெளியில் செல்லமுடியாத நிலை. அப்படியே அவசர நிமித்தம் காரணமாக வெளியேவந்தாலும் காவல்துறை எழுப்பும் நூறு கேள்விகள்...
இந்த நிலையில் மதுரை மக்களவை உறுப்பினர் தனது முகநூலில் மதுரை மக்கள் அவை என்ற புதிய பகுதி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இரண்டு மிகப்பெரிய, பழக்கமில்லாத பிரச்சினைகளை எப்படிச் சந்திப்பதுதெனத் தெரியாமல் திக்குமுக்காடி நிற்கிறது மதுரை. எல்லோருடைய அன்றாட வாழ்வும் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே எல்லோரும் ஏதோ ஒருவகையில் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளோம்.
தொந்தரவுகளும் இடைஞ்சல்களும் பெருக்கெடுத்து, அங்குமிங்குமாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. எல்லாப்பிரச்சனைகளும் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது எது தலையாய பிரச்சனை? அதைத் தீர்மானித்துக்கொள்வது அவசியம்.
தற்போது எல்லாவகையிலும் முன்னுரிமை நோய் தொற்றின்றி மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கைக்கே. அந்தவகையில் மதுரையில் என்னென நடந்து கொண்டிருக்கின்றன? அதனைத் தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதனைச் சார்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டிய செய்திகள்,
அதன்வழி பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் "மதுரை… மக்கள் அவை" என்ற தலைப்பில் முக நூலில் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.
வழக்கம்போல் இந்த முகநூல் பக்கத்தில் மக்கள் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். அதை அரசு, மாவட்ட நிர்வாகங்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க நடவடிக்கை எடுப்பேன், ’’ என்றார்.