tamilnadu

img

தியாகிகள் குமார் - ஆனந்தன் பாதையில் போதைக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டுவோம்!

ஜூன் 18 ஆம் தேதி இரவு முதல் அந்த பகுதியில் மரண ஓலங்கள். தெருவிற்குத் தெரு மரண வீடுகள். இறந்தவர்கள், அந்த பகுதியில் வாழ்பவர்கள் பெரும் பகுதியினர் கட்டுமானத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பூ விற்பவர்கள், சுண்டல் விற்பவர்கள், சுமைப் பணித் தொழிலாளர்கள் என தினக்கூலி உழைப்பாளி மக்கள்தான். கருணாபுரம் பகுதி மக்கள், எதிர்பாராத சுனாமி தாக்கியது போல  பெரும் அதிர்ச்சி யிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.  கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதி காவல் நிலையத்திற்கு பின்புறம் தான் உள்ளது. கஞ்சா விற்ற போது, கள்ளச்சாராயம் பாக்கெட்டுகள் விற்பனையான போது,  காவலர்கள் வராத அந்தப்பகுதி இன்றைக்கு காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களால் நிரம்பி வழிகிறது.  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதி யில் கள்ளச்சாராயம் அன்றாட தொழிலாக இருந்திருக் கிறது. மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் மிகவும் எளிதாக கிடைப்பதால் தற்போது பள்ளி மாணவர்கள் உள்பட மது அருந்துவது, கஞ்சா புகைப்பது அதிகரித்து வருவது மிகவும் கவலை தரும் செய்தியாகும். போதைக்கு அடிமையானவர்கள் குறைந்த விலையில் கள்ளச்சாரா யம் கிடைப்பதால் அதை குடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். செய்தித்தாள்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டதாக தினசரி செய்திகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அப்படி காவல்துறை கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அழித்தது உண்மையென்றால் மீண்டும் மீண்டும் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச தைரியமும், பணமும், ஆட்களையும் கொடுத்து உதவுவது யார் என்ற கேள்வி எழுகிறது.

தேவை சமூக விழிப்புணர்வு

சாங்கம் அரசு நிர்வாகத்தை முழுமையாகப் பயன்படுத்தி கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். உயிரைப் பறிக்கும் போதைப் பொருட்கள் குறித்து அரசு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.   பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எப்போதும் போதைப் பொருட்களை விநியோகம் செய்ய மாட்டோம் என்று உறுதி கூற வேண்டும். அதேபோல  சினிமா நட்சத்திரங்கள் தங்களுடைய படம் தொடக்கத்திலிருந்து முடியும் வரை மது அருந்து வது போல காட்சிகள் இடம் பெறுகின்றன.  இவர்கள்தான்  கள்ளச்சாராயம் மரணம் குறித்து திடீரென கவலைப்படுகிறார்கள். சினிமா பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக் கிறது. குறைந்தபட்சம் பெரிய நட்சத்திரங்களாவது தங்களுடைய படத்தில்  மது அருந்தும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடிய மகத்தான தியாகிகள் 

கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட  போதைப் பொருட்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1980 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து சமரசமற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கு இரத்த சாட்சியாக கடலூரை சேர்ந்த தோழர்கள் குமார், ஆனந்தன் இருக்கிறார்கள்.  ஜூன் 26 ஆம் தேதி, கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில்  குமார் மற்றும் ஆனந்தன் தம் இன்னுயிரை இழந்து 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் இன்றைக்கும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.   தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி பள்ளி, கல்லூரிகள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது வாலிபர் சங்கம். வரக்கூடிய ஜூன் 26 ஆம் தேதி தோழர்கள் குமார், ஆனந்தன் அவர்களுடைய நினைவு நாளில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு எதிராக அணிதிரட்டுவோம், போதைக்கு அடிமை ஆகாத சமூகத்தை படைக்க சபதம் ஏற்போம். - செல்வராஜ்,   மாநில துணைச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்