tamilnadu

மசூர் பருப்பு விலை தொடர்ந்து உயர்வு பட்டாணி, மல்லி விலை சரிவு

விருதுநகர், மே 30- விருதுநகர் சந்தையில் வரத்து குறைவால் மசூர் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து வரத்து குறைவாக உள்ள காரணத்தால் மசூர் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200க்கு விற்கப்பட்டு வந்த மசூர் பருப்பு (பருவட்டு ), கடந்த வாரம் ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.9700க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் மேலும் ரூ.200 உயர்ந்து, தற்போது ரூ.9900-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மசூர் பருப்பு ( உடைத்தது) அதன் விலையும் கடந்த வாரத்தைப் போலவே உயர்ந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9900 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த வாரம் 40 கிலோ மல்லி(லயன்) விலை ரூ.5300 முதல் 5400 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.5200 முதல் 5300க்கு விற்கப்படுகிறது. மேலும், பாசிப்பயறு கடந்த வாரம் ரூ.8800க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.8700க்கு விற்பனையாகிறது. இதேபோல், கடந்த வாரம் 100 கிலோ பட்டாணி பருப்பு( இந்தியா) ரூ.5650க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.50 குறைந்து ரூ.5600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, மற்ற பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.