tamilnadu

தங்கமோ தங்கம்!

தங்கமோ தங்கம்! 
ஜொலித்துக் கொண்டே இருக்கிறது 
செய்திகளில் எப்போதும் 
தங்கம் 

சவரன் கணக்கில் ஏறி
கிராம் கணக்கில் குறைந்து 
எப்படியோ 
இடம் பிடித்து விடுகிறது 
அன்றைய முக்கிய செய்திகளில் 

அகன்று கொண்டே 
போகிறது இடைவெளி 
வரலாறு காணாத விலைக்கும் 
வாங்க முடியாத நிலைக்கும் 

உலகப் பொருளாதாரத்தின் 
ஆதாரம் 
உழைக்கும் மக்களுக்கோ 
சேதாரம் 

வேலை செய்துவிட்டு 
வாங்கினால் 
அது கூலி 
விலை மேல் விலை 
வைத்தால் 
அது செய்கூலி

வாங்கிக் குவித்தவர்களுக்கு 
அது அணிகலன் 
ஏங்கித் தவிப்பவர்களுக்கு 
கொதிகலன் 

உழைப்பவர்களின் கைகளில் 
தேய்ந்து கொண்டே இருக்கிறது 
அதிர்ஷ்ட ரேகை

அதிர்ஷ்டத்தின் பெயரில் 
வளர்ந்து கொண்டே இருக்கிறது 
அட்சய திருதியை 

22 கேரட்,
916,
ஹால்மார்க்........ 
நன்றாக இருக்கிறது விளம்பரங்களில் 
தங்கத்தின் தரம் 

விலையை ஒப்பிடுகையில் 
பாதாளத்திற்கு 
போய் விடுகிறது 
வாழ்க்கைத் தரம் 

“வளர்ச்சி, வளர்ச்சி” என்று 
இதைத்தான் ஒருவர் 
சொல்லிக் கொண்டிருக்கிறார்
பத்து வருடங்களாக.