(கோவி.பால.முருகு)
மதமும் சாதியும் மதுவும் - இங்கு
மனிதம் கொல்லும் நிதமும்
தீதென அதனைப் புறக்கணி-உள்ளம்
திருந்திடா வாழ்க்கை எதற்கினி?
போதைப் பொருள்களை உண்பார்-வலிமை
போகிட நலிந்து காண்பார்
பேதை அவரால் உலகம் - புகழ்
பின்னே சரிந்திடும் கலகம்!
வலிமை இழந்த மக்கள் - இங்கு
வாழ்வதால் இல்லை ஆக்கம்
நலிவைத் தந்திடும் போதை - மக்கள்
நாசமாய்ப் போகும் பாதை!
வலிமை மிக்க இளைஞர் - பலர்
வந்தால் இந்த நாட்டில்
நிலவும் வறுமை போகும் - நல்ல
நிலையில் நாடு ஆகும்!
தீயப் பழக்கம் தீயாம்-ஒழுக்கம்
தேர்ந்தெடு நன்மைத் தாயாம்
வாயும் செயலும் தூய்மை-கொண்டு
வாழ்வதே வாழ்வின் நேர்மை!