tamilnadu

img

அனைவரும் சமமாக கருதப்படும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் அது  சுரண்டல் இல்லாத சமூகமாக அமைதல் வேண்டும்... மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் எம்.ஏ.பேபி பேச்சு

நான் கட்சியின் தமிழ் மாநில மாநாட்டை துவக்கி வைக்கும் நோக்கத்தோடு மட்டும் இங்கு வருகை தரவில்லை; கண்ணூரில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு உங்களை நேரில் அழைக்க வேண்டும் என்ற ஆவலும் என் வருகையில் உண்டு. அதிலும் குறிப்பாக ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் நீங்கள் கண்ணூருக்கு வருகை தர வேண்டும் என விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நிறைவு நாள் பொதுக்கூட்டம் ஏப்ரல் 10 தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்தும், கூட்டாட்சிக்கு விடப்பட்டுள்ள சவால்கள் குறித்தும் பேச உள்ளார்கள்.

மனித குல விடுதலைக்கு செங்கொடி என்ன பங்களிப்பைச் செய்துள்ளது என்பதைத் தான் இங்கு அமைந்திருக்கும் புகைப்பட கண்காட்சி நமக்கு விளக்குகிறது. நம் மாநாடு துவங்கும் காலமான மார்ச் மாதத்திற்கு நம்மை ஆகர்ஷிக்கும் சிறப்புகள் உண்டு. நமது கட்சியின் அகில இந்திய மாநாடு  நடக்கும் வடக்கு மலபாரும் கண்ணூரும் பெரும் போராட்ட வரலாறுகளுக்கு சாட்சியம் வகிக்கிறது.

79 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 27 அன்று தான் கையூர் தியாகிகள் தூக்கில் இடப்பட்டனர். 1931ம் ஆண்டில் மார்ச் 23ல்  பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு எவ்வாறு புரட்சி வெல்லட்டும், ஏகாதிபத்தியம் தொலையட்டும் என முழக்கமிட்டு தூக்கு கயிற்றை முத்தமிட்டார்களோ, அதேபோலத் தான் அப்பு, சிறுகண்டன், குஞ்ஞம்பு நாயர், அபுபக்கர் ஆகியோர் தூக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டதும் மார்ச் மாதம் தான். அத்தனை தியாகங்களும் செங்கொடியை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக செய்தவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பகத்சிங்கும் சங்கரய்யாவும்

தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக நல்ல எதிர்காலத்துக்கான போராட்டம் என்றோ துவங்கி விட்டது. சிலர் வழக்கமாக ஜெர்மனியின் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ரஷ்யாவின் லெனின், சீனாவின் மாவோ, வியட்நாமின் ஹோ சி மின், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவில் போராடிய சே குவேரா ஆகியோர் தான் இங்குள்ள கம்யூனிஸ்ட்களின் தலைவர்கள்; இந்தியாவில் எவரும் இல்லையா என கேட்பதுண்டு. நூறு வயதைத் தொட்டும் செங்கொடியை ஏந்தும் தோழர் சங்கரய்யா இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தான். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இல்லாத போதும் தூக்கு மேடைக்கு செல்லும் நேரம் வரை லெனின் எழுதிய புத்தகத்தை படித்த பகத்சிங், தனது இறுதி நாட்களில் தனிநபர் போராட்டமோ, வெடிகுண்டு எறிவதோ அல்ல, ஒருமித்த போராட்டமே தேவை எனக் கூறினார்.

குறிப்பாக சோசலிசத்தை நோக்கிய போராட்டத்தின் தேவையை உணர்ந்த அவர் தனது அமைப்பிற்கு ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு என பெயர் மாற்றம் செய்தார். பகத்சிங் உடன் போராடிய தோழர்கள் பண்டிட் கிஷோரி லால், பண்டிட் சிவ வர்மா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதில் இருவரும் இணைந்தனர்.

வைகுண்டரின் சமத்துவ சமாஜம்

சோசலிசத்துக்கான போராட்டம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்ததாக வரலாறு உண்டு. இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டம் எங்கு துவங்கியது என கேட்கும் போது நம் அனைவர் மனதிலும் வங்கம், ஆந்திரா ஆகிய இடங்கள் தான் நினைவிற்கு வரும். ஆனால் தமிழகத்தின் தெற்கு எல்லையில் சாமிதோப்பு என்ற ஒரு இடம் உண்டு. கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் லீக் ஆப் த ஜஸ்ட் அமைப்பில் இணைவதற்கு முன்னரே, அன்றைய திருவிதாங்கூரில் ஐயா வைகுண்டர் சமத்துவ சமாஜம் நிறுவ முயற்சித்தார்.

கவிஞர் பாப்லோ நெருடா கூறியது போல் மனித குலம் முன்னேற்றம் அடையும் போதெல்லாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் சோசலிசத்திறகான தேடல் சக்தி பெறும். அனைவரும் சமமாக கருதப்படும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் அது  சுரண்டல் இல்லாத சமூகமாக அமைதல் வேண்டும். அதில் ஆணாதிக்க சிந்தனையும் மாறியிருக்க வேண்டும். சுரண்டல் ஒழியும் அதே நேரத்தில் ஆண் பெண் சமத்துவமும் உருவாக வேண்டும். இந்த நிலையை சிறிய அளவேனும் பாரீஸ் கம்யூனிலும், சோவியத் ரஷ்யாவிலும் அடைய முடிந்துள்ளது.

மார்க்ஸ் சொன்னது என்ன?

கம்யூனிஸ்ட் கட்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதே. சுரண்டலில் ஈடுபடும் முதலாளி வர்கத்தின் விடுதலைக்கும் நாம் போராட வேண்டுமா எனற கேள்வி எழும். தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் சொத்தை உறிஞ்சி வாழும் அவல நிலையில் இருந்து முதலாளிகளை விடுதலை செய்து தொழிலாளர்களைப் போல் உழைத்து வாழ அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று மார்க்ஸ் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அத்தகைய கொள்கை வளத்தோடு இயங்கும் கட்சியின் முன்னேற்றத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும்.

உண்மையான வரலாறு என்பது போராட்டங்களின் வரலாறு, சமத்துவத்திற்கான போராட்ட வரலாறு என்பதை நாம் உரக்க கூற வேண்டும். கலாச்சாரமும், வரலாறு போராட்டங்களுக்கான முக்கிய தளங்கள் என்பதை நாம் மனதில் கொண்டு, அதிக திட்டமிடலுடன், அறிவியல் கண்ணோட்டத்துடன் மானுட விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இந்த செங்கொடியை உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம்.

;