தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை, ஜுன் 30- தமிழ் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மணவிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்களை பொதுமக்கள், ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், தமிழ் பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற 113 மாணாக்கர்களுக்கு, கலைஞர் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதிக்கான பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பாலன் நகர் பகுதி - II திட்டப் பகுதியில், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.9.21 லட்சம் வீதம் ரூ.36.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.