திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் ஆதீனத்தின் உறவினர்களை கோவில் நிர்வாகத்திலிருந்து விலக்கவேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
மயிலாடுதுறை, ஜுன் 26- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள புகழ்பெற்ற அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் முறைகேட்டைத் தடுக்கபூஜை கட்டணங்களை ஆன்லைன் பரிவர்த்தனையாக மாற்றவேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி, ஆதீனத்தின் உறவினர்களை கோவில் நிர்வாகத்திலிருந்து விலக்கவேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருக்கடையூர் அபிராமி, அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பல பெயர்களில் நடத்தப்படும் பூஜைகள் மற்றும் திருமணங்களுக்குண்டான கட்டணங்களுக்கு கோவில் நிர்வாகம் உரிய ரசீது வழங்குவதில்லை. மேலும், அரசு நிலத்தை கோவில் நிர்வாகம் அபகரித்து கட்டிடங்களைக் கட்டிவருகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில் திருப்பதிபோல் பூஜை கட்டணங்களை வரைமுறை செய்து ஆன்லைன் பரிவர்த்தனை செய்து கணிணி ரசீது வழங்கிடவேண்டும், தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்த நிலையில், அபிராமி பொதுநல சங்க தலைவரும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான திமுக பிரமுகர் விஜயகுமார், திருக்கடையூர் ஆலயத்தில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டு மயிலாடுதுறை மாவட்ட துணை ஆட்சியர் கீதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைசெய்வதாக துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.