tamilnadu

img

கம்யூனிஸ்டுகளுடன் வாருங்கள்; தொழில்களைப் பாதுகாப்போம்...

சிவகாசி:
இந்தியத் தொழில்கள்தான் நமக்கு முக்கியம் என்றும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தி, பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் சிவகாசி அருகே முதலிபட்டியில் ஓம் சக்தி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். தற்போது சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையிலும் ஏராளமான விபத்துகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம்  (சிஐடியு) சார்பில் “பட்டாசுத் தொழிலின் எதிர்காலமும், தொழிலாளர்களின் வேலை பாதிப்பும்“ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

சிவகாசியில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன்  தலைமையில் ஞாயிறன்று நடைபெற்ற கருத்தரங்கில்  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், விருதுநகர் மக்களவை உறுப்பினர்  மாணிக்கம் தாகூர், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.என்.ஜோதிமணி மற்றும் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்களும் பேசினர்.

நவீன சோதனை தேவை
பட்டாசு ஆலை உரிமையாளர் மாரியப்பன் பேசுகையில், “ஒவ்வொரு ஆலையும் 30 முதல் 40 ஏக்கர் வரை உள்ளது. ஒரு அதிகாரி அனைத்து அறைகளையும்  சோதனையிட முடியாது. எனவே, செயற்கைக் கோள்கள் மூலம் ஆய்வு செய்தால் ஒரு நிமிடத்தில் ஆலையில் எவ்வளவு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பதைக் கண்டறியலாம்” என்றார். ஆலை உரிமையாளர் கண்ணன் பேசுகையில், “விதிமுறைகளைப் பின்பற்றும் ஆலைகளில் தான் தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும். பி.எப், இஎஸ்ஐ உள்ள ஆலைகளில் வேலை செய்ய வேண்டும். ஆலையை குத்தகைக்கு விடுவது கந்துவட்டிக்கு தருவதை விட மோசமானது. இதை ஒழிக்க வேண்டும்” என்றார். 

எம்.மகாலட்சுமி பேசுகையில், “சிவகாசி பகுதி பட்டாசு தயாரிக்க உகந்த பகுதி. 1922-ஆம் ஆண்டு கலர் மத்தாப்பு தயாரிப்பில் தொடங்கி தற்போது 1,025 ஆலைகள் வரை இந்தத் தொழில் உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம், சுற்றுச் சூழல் மாசு போன்ற பாதிப்புகள் இத்தொழிலை நிலைகுலையச் செய்த சமயத்தில், தொழிலைப் பாதுகாக்க  சிஐடியு தொழிலாளர்களைத் திரட்டி போராடியுள்ளது.  உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது” என்றார்.

பாதுகாப்பான தொழிலாக மாற்றுங்கள்
மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில், “சமீபத்தில் நேர்ந்த விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இதனால், மீண்டும் சிவகாசி பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளார்களா என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதை சாக்கிட்டு, இந்த தொழிலே தேவை இல்லை; பட்டாசு வெடிப்பதே தவறு; இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என்றெல்லாம் பலர் கூறத் தொடங்கியுள்ளனர். இதை உணர்ந்து  மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் இணைந்து இதை பாதுகாப்பான தொழிலாக நடத்த வேண்டும்.  உலக அளவில் ஏற்றுமதி செய்யும் தொழிலாக இதை மாற்ற வேண்டும்” என்றார்.

மாவட்டப் பொருளாளர் கே.முருகன் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  டிப்மா தலைவர் எஸ்.ஸ்ரீராம் அசோக், செயலாளர் டி.கண்ணன்,  சிப்மா தலைவர் மாரியப்பன்,  எப்ஐஎப்ஐ மாநிலத் தலைவர் ராஜாசந்திரசேகர், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், காத்தலிங்கம், அருண், கண்ணன், குருசாமி, எஸ்.ஜோதி,  எம்.ஜெபஜோதி  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சுரேஷ் நன்றி கூறினார். 

                                                                                         ************************

“சீன பட்டாசுகள் இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன். சீன பட்டாசுகள், துறைமுகங்கள் வழியாக விளையாட்டுப் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்ந்து வருகின்றன; எனவே, அங்கு ஸ்கேன் மெஷின் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய தூத்துக்குடி துறைமுகம் மிகவும் அருகில் உள்ளது எனவும் தெரிவித்தேன்.  உள்துறை அமைச்சரை ஆலை உரிமையாளர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கிடச் செய்தேன்.  ஆனால், உரிமையாளர்கள் வரவில்லை. அதற்குக் காரணம், இரு மத்திய அமைச்சர்கள், கம்யூனிஸ்டுகளுடன் செல்லலாமா என உரிமையாளர்களிடம் கேட்டுள்ளனர். ஏன்கம்யூனிஸ்ட்டுகளுடன் செல்லக்கூடாது? கம்யூனிஸ்ட்டாக இருப்பது பெருமை. செய்யக் கூடிய காரியம் நல்லதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். இந்தியத் தொழில்கள் தான் நமக்கு முக்கியம். சீனாவின் தொழிலைப் பாதுகாப்பது எந்தவொரு இந்தியனின் வேலையும் இல்லை. பட்டாசுத் தொழிலை பாதுகாக்க  நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.\பிஎச்இஎல்(பெல்)- நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. சர்வதேச போட்டியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கே உற்பத்தி செலவு குறைவு. நம்மிடம் மிகப்பெரிய நிபுணர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். நம்மால் உலகில் தலை சிறந்த ஸ்டீல் வெல்டிங் ராடுகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நமது அரசு, ஜெர்மனியில் இருந்து அதை இறக்குமதி செய்கிறது. ஒரு காலத்தில் பம்பாய், வியாபார நகரம். கல்கத்தா தொழிற்சாலைகள் நகரம். சென்னை அறிவாளிகள் நிறைந்த நகரம். தற்போது அவையெல்லாம் மாறி வருகிறது. உலகில் பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது வங்கதேசம் அந்த இடத்திற்கு வந்து விட்டது.  அரசிடம் பத்து பைசா கூட இல்லையென மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கின்றனர். எல்.ஐசி, பிஎச்இஎல், விமானம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றை விற்க முடிவு செய்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி, சுயசார்பில் உள்ளோம் என்கிறார். அவர்உட்காரும் நாற்காலி, செல்லும் விமானம், போடும் கோட் என எதிலுமே சுயசார்பு கிடையாது. எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது என மத்தியநிதி அமைச்சரை சந்தித்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். உடனே நிதியமைச்சர், நீங்கள் என்ன கம்யூனிஸ்ட்டுகளா எனக் கேள்வி கேட்டுள்ளார். இது என்ன நியாயம்?

கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் பேசியதிலிருந்து...

 (ந.நி.)

;