கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 வெளியேறியது மெஸ்ஸியின் இன்டர் மியாமி
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு நடைபெற்ற 3ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி விளையாடி வரும் இன்டர் மியாமி (அமெரிக்கா), ஐரோப்பிய சாம்பியனான பிஎஸ்ஜி (பிரான்ஸ்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிஎஸ்ஜி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி படுதோல்வியுடன் வெளியேறியது. அதே போல நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற 4ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிளமிங்கோ (பிரேசில்) - பேயர்ன் மூனிச் (ஜெர்மனி) அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கோலடிக்க ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. இறுதியில் பேயர்ன் மூனிச் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டங்கள்
ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) - ஜுவன்டஸ் (இத்தாலி) நேரம் : நள்ளிரவு 1:30 மணி (செவ்வாய்) இடம் : மியாமி கார்டன்ஸ், புளோரிடா, அமெரிக்கா
டார்ட்மண்ட் (ஜெர்மனி) - மோன்டர்ரி (மெக்சிகோ) நேரம் : காலை 6:30 மணி (புதன்கிழமை) இடம் : பென்ஸ் மைதானம், அட்லாண்டா, அமெரிக்கா
அரசியலமைப்பை காப்போம் அம்பேத்கருடன் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று விதமான உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தோனி அம்பேத்கர் சிலையுடன் இருக்கும் புகைப்படம் “அரசியலமைப்பை காப்போம்” என்ற ஹேஸ்டேக்குடன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படம் கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டது. ஆனால் எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை.
டிஎன்பிஎல் 2025 இன்று முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள்
9ஆவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், முதல் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் சென்னை - திருப்பூர் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இரவு 7:15 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து புதன்கிழமை அன்று நடைபெறும் 2ஆவது பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் திருச்சி - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
இன்றைய பிளே ஆப் சுற்று ஆட்டம்
சென்னை - திருப்பூர்
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : என்.பி.ஆர் மைதானம், நத்தம், திண்டுக்கல்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஓடிடி)