புகளூர் பெண்கள் அரசுப் பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் மாதர் சங்க கரூர் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
கரூர், ஜூலை 15- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் ஒன்றிய மாநாடு புகளூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் கரூர் ஒன்றிய பொறுப்பாளர் இ. சுமதி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் சத்தியவாணி வரவேற்று பேசினார். புகளூர் நகர்மன்ற உறுப்பினர் எ. இந்துமதி, மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சசிகலா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ். லலிதா சிறப்புரையாற்றி னார். வி.மணிஷா நன்றி கூறினார். மாதர் சங்க ஒன்றியக்குழு புதிய தலைவராக சத்தியவாணி, செயலாளராக இந்துமதி, பொருளாளராக ஓவியா, துணைத் தலைவ ராக மரியம், துணைச் செயலாளராக ரேஷ்மா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக நிர்மலா(மறவை), சுகன்யா(டிஎன்பிஎல்), மனிஷா(டிஎன்பிஎல்) அனிதா(ஒரத்தை), இசைவாணி (டிஎன்பிஎல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெண்களை, பெண் குழந்தைகளை பாதுகாக்க அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். புகளூர் பெண்கள் அரசுப் பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் முன்பு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய மேம்பாலம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. முன்ன தாக மாநாட்டில், பெண்களுக்கான விளை யாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.