tamilnadu

img

படைப்புத்திறனை காட்சிப்படுத்திய கலைஞர்கள்

மனிதரின் அற்புதப்படைப்பு திறனின் மைல்கல் ஓவியம் சிற்பம் என்றால் அது மிகையாகாது. மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் ஆக்கத்திறனையும் வெளிப்படுத்தும் வழிமுறை தான் ஓவியம், சிற்பம் என்ற கலைப்படைப்பு. குகைகளில் கரிக்கோல்கள் மூலம் வரைய தொடங்கிய ஓவியங்கள் சுவர், துணி (கேன்வாஸ்), தாள்,உலோகம், எண்ணெய், நீர்வர்ணம், ஓலைச்சுவடி ஓவியம் என தனது திறமையை பறைசாற்றிக் கொண்டே வருகின்றனர். சிற்பம், சுடுமண் மென்தொழில்நுட்பம் என தனது கலைத்திறனை விரித்துக்கொண்டே செல்கின்றனர் கலைஞர்கள். தகவல் குறியீடாக துவங்கிய ஓவியம் கருத்துப்படமாக பரிணமித்து நவீன ஓவியமாக உச்சம் தொட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் “தேசிய ஆராய்ச்சி அறிஞரின்” பரிக்ரமா-3 என்ற தலைப்பில் ஓவியம், மண் மற்றும் உலோக சிற்பக்கண்காட்சி பிப் 27முதல் மார்ச் 5 வரை நடந்தது. பிப்.27 அன்று லலித்கலா அகாடமியின் மண்டலச்செயலாளர் ஸ்ரீஎம்.சோவன் குமார், சிங்கப்பூர் குடியரசின் கன்சல் ஜெனரல் எட்கர் பாங்  கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் மண்டல மைய சென்னை தேசிய ஆராய்ச்சி அறிஞர் தயாரித்த கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
படைப்பாளிகள்
கலைஞர்கள்  வசந்தன் வீரப்பன் (புதுச்சேரி) விபின் வடக்கினியில் (கேரளா), சிந்தட ஈஸ்வர ராவ் (ஆந்திரப் பிரதேசம்), சந்தோஷ் பட்டர் (கர்நாடகா), ஈஸ்வரய்யா மத்தபதி (கர்நாடகா), அமோல் காடே (மகாராஷ்டிரா), அங்கிதா தௌலதபாத்கர் (மகாராஷ்டிரா), ஆகாஷ் பார்கண்டே (மஹாராஷ்டிரா) ஆகியோரின் நுட்பமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த படைப்பாளிகள் வாழ்விடங்களின் மண்சார்ந்தும் உலகளாவிய பார்வையோடு விளங்கிவருவது அவர்களின் காட்சிப்படுத்தலில் தெரிந்தது. கண்காட்சியில் மனிதனின் ஒப்பில்லா ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சிற்பம்
அழகியல்சார்பு செயல்பாடுகளாக சிற்பக்கலைக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களின் அசாத்திய திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. முப்பரிணாம கண்ணோட்டத்தோடு வெளிப்படுத்தப்படும்  படைப்புத்திறனின் அதீத கலைவடிவமாக சிற்பம் கருதப்படுகிறது. செதுக்குதல், வடித்தல், சுடுமண் சிற்பம், மட்பாண்டம் செய்தல் சிற்பக்கலையோடு இணைந்துள்ளது. மனிதர்களின் கலைப்படைப்புகளில் வித்தியாசமான உருவங்களை கலைநுட்பத்துடன் நேர்த்தியாக வரையும் திறன் மேலோங்கி வருகிறது. ஆன்மீகக்குறியீடு, இயற்கை நேசம், உணர்ச்சியின் பிம்பமாக படைப்புகள் உருவாகி வருகின்றன.
ஓவியம்
ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (அப்ஸ்டிராக்) தன்மை கொண்டனவாகவோ இருக்கின்றன. இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புதுவையை சேர்ந்த வசந்தனின் படைப்புகளில் ஆன்மீகம், ஆண்-பெண் உறவு, இயற்கை வனம் உள்ளிட்டவைகளை குறியீடாக பயன்படுத்தியிருந்தார். அவர் பேசுகையில், ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன என்றார். கேரளாவை சேர்ந்த விபின் என்ற ஓவியர் தான் வாழ்ந்த மண்ணின் பண்பாட்டையும் அரசியல், இயற்கை அழகியலையும் மிக நேர்த்தியாக வடித்துள்ளார். அனுபவங்களையும் புறச்சூழல்களையும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடமாகக்குபவனே நல்ல படைப்பாளி என்றார். அர்த்தம் புரியாவிட்டாலும் சில படங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. சிலது கூட்டமாகவும் சிலது தனித்துவமாகவும் இருப்பது வியப்பில்லை தான், ஆனால் கண்காட்சியை விட்டு வெளியே கிளம்பியபோதும் ரயில் கடந்த தண்டவாளமாய் இதயம் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. அரங்கத்தில் உள்ள சில ஓவியங்கள் மூளையில் ஸ்டிக்கர் போட்டு போல ஒட்டிக்கொண்டன. இந்த படைப்புகள் நுட்பமான திறமையை உள்ளடங்கியதாக இருக்கிறது. கற்பனையில் வரையப்படும் ஓவியங்களையும் சிற்பங்களையும் சமகாலத்து கலை படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியாக இதனை தாங்கள் செய்துவருவதாக அந்த எட்டுப்படைப்பாளிகளும் கூறினர். சமூக விழுமியங்களை பேசும் சாமானிய மக்களுக்கான படைப்புகள் யாவும் காலத்தால் அங்கீகரிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை,

;