திஸ்பூர், பிப்.13- குழந்தைத் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அசாம் பாஜக அரசு முஸ்லீம் மக்களைக் குறி வைத்து வேட்டையாடி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை யிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. அங்கு கடந்த ஒருவார காலமாக குழந்தை திருமண தடுப்பு என்ற பெயரில் இளைஞர்கள், முதியவர்கள் என பாகு பாடின்றி, புகார் கடிதம் எதுவும் இல்லாமல் கைது நடவடிக்கை தீவிரமாகி உள்ளது.
முஸ்லீம்களுக்கு குறி
குழந்தை திருமணம் தொடர்பாக 4,074 புகார்கள் வந்ததாகவும், நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவிட்டதாகவும் கூறி காவல்துறை யினர் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அடக்கு முறையை கையாண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 8,000 பேர் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். திருமணம் செய்த மணமகன், மணம் முடித்து வைத்த முஸ்லீம் மவுலானா, ஹாஜிக்கள், பெற்றோர்கள், காப்பாளர்கள் என சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 2,000 பேர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். கைது செய்யப் பட்டவர்களில் 14 வயதுக்கும் குறைவான பெண்களை மணம் முடித்தவர்கள் என சில இளைஞர்களை தனியாக பிரித்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்கள்.
மாதர் சங்கம் கண்டனம்
இந்த விவகாரம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை திரு மணத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தம்பதிகளை துன்புறுத்தும் அசாம் பாஜக அரசின் திடீர் நடவடிக்கைக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி.கே.ஸ்ரீமதி பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைத்திருமணங்களை மாதர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் படி 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைத் தடுக்க தனது ஆட்சிக் காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அசாம் பாஜக அரசு, சில மாவட்டங்களில் குறைந்த வயது பெண் களை திருமணம் செய்து கொண்ட கணவர் களை திடீரென கண்மூடித்தனமாக கைது செய்துவருகிறது. சமீப காலங்களில் திருமணம் செய்த வர்களை மட்டுமல்லாமல் திருமணமாகி பல வருடங்கள் ஆன ஆண்களை கை விலங்குடன் காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைத்து வருகிறது அசாம் காவல்துறை. இதனால் கைது செய்யப்பட்டவர்களின் மனைவிகள், குழந்தைகள் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.
தேசிய குடும்ப நல ஆய்வு 2021-ன்படி, அசாம் மாநிலத்தில் 32% பெண்கள் சட்டப்பூர்வ 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று கூறு கிறது. அப்படியானால், ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அரசாங்கம் மேற்படி சட்டத்தை முற்றிலும் சூழ்ச்சிகரமான முறையில் அம லாக்குவதன் மூலம் அசாமின் பாதி பகுதி யை சிறைச்சாலையாக மாற்ற நினைக் கிறதா? இல்லை மாநிலத்தில் துன்புறுத்தல் மூலம் பயங்கரவாத சூழலை உருவாக்கு கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அசாம் அர சாங்கத்தின் கொடூரமான பிரச்சாரத்தை உடனடியாக திரும்பப் பெற்று, சட்டவிரோத மாக அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான குடும்பங் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அசாம் மாநிலக்குழு அர சாங்கத்திற்கு எதிரான போராட்டத் திட்டங்களிலும், சட்டரீதியாகவும், நிதி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறது. அசாம் அரசு இந்தப் பிரச்சனையை சமூக ரீதியாகப் பார்க்கவும், மேலும் மாநிலத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மையை ஒழிக்கவும், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என்றுகூறியுள்ளனர்.