tamilnadu

img

தமிழகத் திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு...... சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.....

மதுரை:
தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட தமிழகத்திற்கான திட்டங்களை உடனடியாக அமலாக்குவதற்கு மத்திய அரசுக்கு எந்தவிதமான நிர்ப்பந்தத்தையும் அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அதிமுக அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தமிழக அரசை பொறுத்தவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மிகவும் அலட்சியத்தோடு நடந்து வருகிறது. குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிப்படை பணி என்பது அதற்கான நிலத்தை கையகப்படுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம்.அந்த நிலத்தை மடைமாற்றி தர வேண்டும்.இந்த வேலையை செய்ய மாநில அரசு 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த மருத்துவமனையால் நேரடியாக லாபம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு நினைக்கிறது. அதனால் தான் 2020 டிசம்பரில் தான் நிலத்தை மாற்றிக் கொடுத்துள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எந்த ஒரு அக்கறையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு மறுக்கிறது.குறிப்பாக, 2023ல் எய்ம்ஸ் மருத்துவ மனை நடைமுறைக்கு வர வேண்டும். அதே ஆண்டு நடைமுறைக்கு வர வேண்டியவை ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆகிய  3 மாநிலங்கள். தமிழகத்தை தவிர்த்து மற்ற3 இடங்களில் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. அந்த 3 இடங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அடிப்படை உட்கட்ட
மைப்பான தற்காலிக மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்டது. மாணவர்கள் தங்குவதற்கான கட்டிடம் தற்காலிகமாக கொடுத்துள்ளது. அங்கு வந்துஅடிப்படை கட்டமைப்புகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிக மருத்துவமனை, மாணவர்கள்தங்குவதற்கான கட்டிடம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி ஒரு முயற்சியே தமிழக அரசு எடுக்கவில்லை.

தனி அலுவலர் எங்கே?
இதில், உச்சபட்சமான பிரச்சனை என்றால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.அப்படி ஒரு தனி அலுவலர் நியமித்தால் தான் எய்ம்ஸ் சார்ந்த அனைத்துவிஷயங்களையும் தொடர்ந்து பேசி ஒருங்கிணைந்து அந்த வேலையை எளிதில் செய்ய முடியும். இப்போது வரை ஒரு தனி அலுவலர் நியமிக்கப்பட வில்லை. இதை விட உச்சமாக அடிக்கல் நாட்டி 2 வருடம் ஆகிறது. இப்போது வரை ஒரு வேலை கூட செய்யவில்லை. 2 வாரத்திற்கு முன்னால் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் தமிழகத்துக்கு வரப்போகிற முதல் எய்ம்ஸ். இது ஒரு மிகப்பெரிய கனவு. குறிப்பாக, தென்தமிழ்நாட்டில் வாழும் மக்களின் மிகப்பெரிய கனவு. அது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மாநில அரசு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை தொடர்ச்சியான மாற்றான்தாய் மனப்பான்மையின் நீட்சியாக உள்ளது. குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனை 2019 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. தற்போது வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை. குறிப்பாக, மதுரை எய்ம்ஸ் மட்டும் தான் கடன் வாங்கி கட்டுகிற மருத்துவமனை. மற்ற மாநிலத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  ஜெய்க்கா எனப்படும் ஜப்பான் பன்னாட்டுமுகமை நிதியின் மூலம் கட்டப்படுகிறது. முதலில் கடன் வாங்க வேண்டுமென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த ஜூன் மாதத்திற்குள்கையெழுத்திடுவோம் என்று கூறினார்கள். பிறகு, டிசம்பரில் கையெழுத்துபோடுவோம் என்றனர். நான் இப்போதுசெயலாளரை பார்த்து மீண்டும் கேட்டதற்கு வரும் மார்ச் மாதத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வோம் என்று கூறியுள்ளனர். 3 பட்ஜெட் முடிந்து விட்டது. ஆனால், மத்திய அரசுஅலட்சியம் காட்டி வருகிறது. மத்திய அரசின் பொறுப்பின்மை, மாநில அரசு கவனமின்மையின் உச்சம் இது.

ரூ.800 கோடி அதிகரிப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சா மிக்கு இதில் அக்கறையில்லை. அவர் வேறு அரசியல் லாபத்துக்காக தான் பிரதமர் மோடியை போய் சந்தித்தார். ஆனால், தமிழகத்தின் நலனுக்காகவோ, தமிழக மக்களுக்கு வர வேண்டிய திட்டங்களை கேட்டு பெறுவதோ, அதுஅறிவிக்கப்பட்டு தாமதம் ஆகியிருப்பதை பற்றி சிறு அழுத்தம் கூட தரவில்லை. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,200 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. இப்போது ரூ.2000 கோடி ஆகும் என்று கூறுகின்றனர். இப்போது ரூ.800 கோடிஅதிகரித்துள்ளது. மீண்டும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமல்ரூ.2 ஆயிரம் கோடியை அறிவிக்க முடியாது. அப்போது மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. மாநில அரசு முனைப்பு காட்டினால் தான் விரைவில் நடக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக இந்த பிரச்சனையை எழுப்ப வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வாரமும் மத்திய அமைச்சர், செயலாளரை சந்திக்கிறோம்.

மாநில அரசும், மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் பேச வேண்டும். அவர்கள் பேசுவதில்லை. தில்லி செல்லும் முதல்வர் எடப்பாடி கூட பேசவில்லை. இதன் மீது அக்கறையின்மை தான் காரணம். அவர்களுக்கு தனி லாபம் கிடைக்காது. அதனால், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் பட்சத்தில் மருத்துவம் சார்ந்த, சுகாதாரம் சார்ந்த மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற பகுதியாக தென் தமிழகம் மாறும். நமக்கு ‘மெடிக்கல் ஹப்’பாக இருப்பதுசென்னை, கோவை தான். மத்திய மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் வரும் போது, அதையொட்டி சுகாதாரம், போக்குவரத்து சார்ந்து மதுரை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.எனவே, மத்திய அரசு இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

;