tamilnadu

img

ஈரோடு கிழக்கும், அதிமுக வழக்கும் - மதுக்கூர் இராமலிங்கம்

மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்பு ஒரு காட்சி - கிருஷ்ணரின் ஆத ரவைப் பெற பாண்டவர்கள் கௌரவர்கள் என இருதரப்பும் முயற்சித்தன. கண்ணனின்  மாளிகைக்கு இருதரப்பும் சென்றன. அப்  போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தா ராம். துரியோதனன் கண்ணனின் தலைமாட்டுப் பகுதியில் காத்திருக்க தருமன் கால்மாட்டுப் பகுதியில் காத்திருந்தார்களாம். கண்ணன் விழித்தவுடன் முதலில் பாண்டவர்களையே பார்த்தாராம். பிறகுதான் கௌரவரை பார்த்தா ராம். நான் வேண்டுமா? என் படை வேண்டுமா  என்று கண்ணன் கேட்க, கௌரவர்கள் படை யைக் கேட்க பாண்டவர்கள் எங்களுக்கு நீ போதும் கண்ணா என்று கூறியதாக கதை போகும். புராணீகர்களின் கருத்துப்படி கலிகால மான இப்போது இந்தக் கதை வேறுமாதிரி நடந்து கொண்டிருக்கிறது. கமலாலய வாச லில் இபிஎஸ், ஓபிஸ் என இருதரப்பும் காலடி யில் காத்துக் கிடக்கிறது. கையில் அப்பத்தோடு பூனைகள் பஞ்சாயத்துக்கு வந்திருப்பதைப் பார்த்த குரங்கு குஷியானதைப் போல மொத்த  கட்சியையும் கபளீகரம் செய்ய திட்டமிடு கிறது பாஜக. விசுவாசத்தில் விஞ்சியவர் இபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸா என்று இருதரப்பும்  அனல் பறக்கும் வாதங்களை முன்வைக்கின் றன. 

ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக தங்கள் பக்கமே இருக்க வேண்டும் என இரு தரப்பும் கெஞ்சின. பாஜகவின் கிளை அலுவலகமாக மாறிப் போன தேர்தல் ஆணையத்திடம் எப் படியாவது சொல்லி இரட்டை இலையை தங்களுக்கே தந்தருள வேண்டும் என  இரு தரப்பும் முறையிடுகின்றன. இரட்டை இலை கிடைத்தால் போதும், பந்திச் சாப்பாட்  டைக்கூட பாஜகவே எடுத்துக் கொள்ளலாம் என்று இரு தரப்பும் இறைஞ்சுகின்றன. எடப் பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் இரட்டை  இலை யாருக்கும் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. பணிவிலும், விசுவாசத்திலும் அந்தக்  காலத்திலிருந்து முந்தி நிற்கும் ஓபிஎஸ்  எனக்கு ஒரு கண் போனால் கூட பரவா யில்லை. எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற பரந்த மனதுடன் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அவர்களுக்கு பறந்து பறந்து பணியாற்ற நாங்கள் தயார். நீங்கள் நிற்கவில்லை என்றால் எங்களை ஆத ரியுங்கள் என்று அண்ணாமலைக்கு அரோகரா போடுகிறார். வேட்பாளரை அறிமுகப்படுத் தும் போதும் கூட பாஜக வேட்பாளரை அறி வித்தால் அடுத்த நிமிடமே நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று தன்னுடைய பணிவின் ஆழத்தை கயிறு விட்டு அளந்து காட்டினார்.  ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்க ளுக்கு பின்னால் தான் நின்று கொண்டிருக்கி றார்கள் என்று இரு தரப்பும் அவ்வப்போது சவால் விட்டு சலம்புகிறார்கள். ஆனால் இரு தரப்பும் பின்னால் திரும்பி பார்த்து பல ஆண்டு களாகிறது. திரும்ப முடியாத அளவிற்கு குனிந்தே இருப்பதால் வந்த முதுகுவலி போலும். 

எம்ஜிஆரால் துவங்கப்பட்டு ஜெயலலிதா வால் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிமுக எனும்  கட்சியை இப்போது பெரும்பாலும் நீதிமன்றம்  தான் நடத்திக் கொண்டிருக்கிறது. யார் நடத்திய பொதுக்குழு செல்லும், யார் இடைக்கால  பொதுச் செயலாளர், யார் ஒருங்கிணைப்பா ளர், யார் இணை ஒருங்கிணைப்பாளர் என்று  நீதிமன்றத்தில் நித்தமும் இடைவிடாது விசா ரணை. உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஒருநிலை யில் குழம்பிபோய் இபிஎஸ் என்றால் என்ன?  ஓபிஎஸ் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பி னார்கள். அவையெல்லாம் பெயர்களின் சுருக்  கங்கள் என வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அந்தக் கட்சியே இப்போது சுருங்கிப் போய் விட்டதன் அடையாளம் இது. ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு தாமே முதல்வராக முயன்றார் சசிகலா.  அது முடியாமல் போனது. சசிகலாவின் தய வால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். வடை போச்சே என்று நொந்த ஓபிஎஸ் ஆடிட்டர் குருமூர்த்தி கொடுத்த ஆலோசனையின் அடிப்  படையில் கடற்கரை சமாதி முன்பு கண்ணீர் மல்க மவுன விரதம் இருந்துவிட்டு தர்ம யுத் தத்தை அறிவித்தார் ஓபிஎஸ். அதிமுகவை உடைத்தது பாஜக. பின்னர் பாஜகவின் உள்  ளூர் ஏஜெண்டான ஆளுநர் மூலம் இரு தரப்பையும் இணைத்து கைகுலுக்க வைத்து விட்டு முதல்வர், துணை முதல்வர், ஒருங்கி ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அனைத்தையும் ஒருங்கிணைத்தது பாஜக.  ஆட்சியதிகாரத்தை தொடர்ந்து ருசிக்க ஒற்றுமையாக இருப்பதுபோல நடித்தவர்கள்  ஆட்சி போனவுடன் மறுபடியும் போட்டி பொதுக் குழுக்களை கூட்டினர். இப்போது இரட்டை இலை மீண்டும் தொங்கலில் இருக்கிறது. 

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத  நடவடிக்கைகளையும், கைதட்டி விசிலடித்து வரவேற்கிறது இருதரப்பும். இருவரையும் ஒரு சேர அமுக்கி, அதிமுகவை அப்படியே சாப்பிட  துடிக்கும் பாஜக இருவரின் போட்டியை தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது. உண்  மையில் பழைய அதிமுக இப்போது நான்கு  பிரிவாக இருக்கிறது. இபிஎஸ், ஓபிஎஸ் தவிர,  டிடிவி தினகரனின் அமமுக என மூன்று அணி.  இதுதவிர சிறை செல்வதற்கு முன்பு நான்தான் பொதுச் செயலாளராக இருந்தேன். இப்போதும்  நான்தான் பொதுச் செயலாளர். எனவே என்னு டைய கட்டளைக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் என சசிகலா கூறி வருகிறார். ஆனால்  இந்த நான்கு அணியும் பாஜகவுக்கு எதிராக  கொட்டாவி கூட விடுவதில்லை. தமிழ்நாட்டின்  நலனை கெடுக்கும் ஒன்றிய அரசை கனவில்  கூட கண்டிப்பதில்லை. இந்த நேரத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்  தல் குறுக்கிட, முட்டலும், மோதலும் உச்சகட்டத்  திற்குப் போயுள்ளது. தமிழகத்தில் வெற்று சவடால் மூலமே தம்மை பெரிய கட்சி போல  காட்டிக் கொள்ளும் பாஜக தனித்து போட்டி யிட்டால் சாயம் வெளுத்து விடும் என போட்டி யிட அஞ்சுகிறது. விமானத்தின் அவசரக் கதவு  விசயத்திலேயே அவசரப்பட்ட பாஜக தலை வர் அண்ணாமலை இப்போது அவசரமாக தில்லி சென்றிருக்கிறாராம். தமாகாவை இறக்கிவிட்டு இருதரப்பையும் ஆதரிக்குமாறு கொடுத்த நிர்ப்பந்தம் பலிக்காதது பாஜகவை பெரும் சோதனையில் தள்ளிவிட்டது. ஓரிரு வரை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்து வரும் ஜி.கே.வாசன் தாம் தப்பித்தது குறித்து பெருமூச்சு விட்டிருப்பார். 

இடையில் தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் சீமான் தனது வழக்கமான பாணி யில் இந்தத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரு மகன் ஈவெரா தம்மை சந்தித்து நாம் தமிழர்  கட்சியில் அவரை இணைத்துக் கொள்ளு மாறு கேட்டதாக ஒரு குண்டைப் போட்டிருக்கி றார். இது யாருக்குமே தெரியாது என்றும் கூறி யிருக்கிறார். சீமானை சந்தித்த ஈவெராவுக்கா வது இது தெரியுமா? என்று தெரியவில்லை. ஆர்.கே.நகர் புகழ், டிடிவி தினகரன் நானே உண்மையான கட்சி என்று கூறி ஒரு வேட்பா ளரை இறக்கி விட்டுள்ளார்.  திமுக அணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பா ளராக அறிவிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எதிர்க்கூடாரமோ, வேட்பாளருக்கும், சின்னத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நாளில் களம் தெளிவாகி விடும். இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஆளுக்கு ஒரு கிலோ ஈரோடு மஞ் சளை இப்பொழுதே வாங்கி வைத்துக் கொள்  வது நல்லது.

;