உதய் நார்கர் செயலாளர், மகாராஷ்டிரா மாநிலக்குழு சிபிஐ(எம்.)
அது ஒரு விளக்க முடியாத தருணம். குமாரின் அசைவற்ற உடல் கீழே இருக்க, சுற்றிலும் பழங்குடி மக்களும், பழங் குடி அல்லாதவர்களும், நெருங்கியவர்களும் பெரும் எண்ணிக்கையில் சுற்றிக் கூடியுள்ளனர். தமது வாழ்நாளில் அரை நூற்றாண்டை அவர் யாருடன் செலவழித்தாரோ அந்தப் பழங்குடி யினர் இப்போது உண்மையை ஏற்கத் தயாராக இல்லை. பெண்கள் ஒரே குரலில் புலம்பினர், ‘குமார்பாவு பரத் யா’. குமார் அண்ணா திரும்ப வாருங்கள். அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களில் ஓரிருவர்தான் அவரது நேரடி ரத்த சொந்தங்கள். அந்தக் கூட்டு அஞ்சலியில் ஒவ்வொருவரும் அவரது இழப்பைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்தனர். அங்கு ஒரு தெளிவான கடின நிலையும், தெளிவற்ற சக்தியும் நிரம்பி யிருந்தது. அந்த விதைகள், இப்போது ஓய்வு கொண்டிருப்பவரால் அவர்களிடையே தூவப் பட்டன. அந்த அசைவற்ற உடலும், ஆன்மாவும், அருகே நின்று கொண்டிருக்கும் நானும் வெறும் உடல்கள்தானா? நான் அந்த நிலையற்ற சிந்தனையை அடக்குவதற்கு முன்னால், நீண்ட காலமாக குமாருக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜெய்சிங் மாலி தனது நடுங்கும் கரங்க ளால் மைக்கை எடுத்துப் பேசத் தொடங்கினார். “தோழர்...” என்று அழைத்து நிறுத்தினார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் உறுதியற்று, சரியான சொல்லைத் தேடிக் கொண்டிருந்தார் என்று சந்தேகப்படக்கூடும். இல்லை. அவர் குமாரைக் குறிப்பிடவில்லை. மராத்தியில் காம்ரேட் என்ற சொல்லுக்கு ஒருமை, பன்மை இரண்டும் பொருந்தும். ஜெய் சிங் எங்களிடம்தான் பேசிக் கொண்டிருந்தார்.
“குமார்பாவுக்கு நாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் இது.” தொடக்கத்தில் ஏற்பட்ட தயக்கத்தை அவரால் விட முடியவில்லை. பிறகு மேலும் சரியான சொற்களைத் தேடி எடுத்துக் கொண்டு அவர் தொடர்ந்தார். “நாம் இப்போது அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யப் போகிறோம். அவரது உடலுக்கு எரியூட்ட நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இங்கு கூடிய அனைத்துப் பழங்குடியினரும், “அவர் எங்களில் ஒருவர். நாங்கள் எங்கள் பாரம் பரியத்தின்படி அவருக்கு இறுதிச் சடங்கு செய்வோம். எனவே நாங்கள் முடிவெடுத்து விட்டோம்...” இப்போது அவரது சொற்கள் மேலும் அளவுடன் இருந்தன, உறுதியான குரலில், “நாங்கள் அவரைப் புதைப்போம், குமார் உடலை எரிக்க மாட்டோம்.” நான் ஸ்தம்பித்துப் போனேன். நேர்மை யாகச் சொல்கிறேன், அவர் சொல்வதை ஜீரணித்துக் கொள்ள எனக்கு சிறிது நேரமாயிற்று. “தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். அவர் எங்களுக்கு உரியவர்”. ஜெய்சிங் இறுதியாகச் சொன்னார். அனைவரும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அனைவரும் ஒரு பெரும் கலாச்சாரத் தாவலை எடுத்துக் கொண்டிருக் கிறோம். இந்தக் கூட்டம் தோழர் பி.டி.ரணதிவே பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தது. அதில் ஏற்கனவே ஆறு-ஏழு அடிக்குக் குழி தோண்டப்பட்டிருந்தது. குமாரின் உடல் லால் சலாம் என்ற கோஷத்துடன் குழியைச் சுற்றி சில சுற்றுக்கள் வந்த பிறகு குழிக்குள் வைக்கப்பட்டது. அதற்கு குறி யீடான முறையில் வேகவைக்கப்பட்ட அரிசி யும், வெல்லம் கரைத்த தண்ணீரும் ஊட்டப் பட்டது. பின்னது பழங்குடியாகப் பிறந்த ஒரு வருக்கு மதுவாக இருக்கும். குமாருக்காக ஒரு சமரசம் செய்யப்பட்டது.
நாங்கள் ஒவ்வொரு வரும் திரும்பி நின்று குழிக்குள் ஒரு கை மண்ணைப் போட்டோம். அவர் என்னவாக வளருவார்? குமார் ஒரு பிராமணனாகப் பிறந்தவர். அவர் ஒரு பிராமணனாக இறக்கவில்லை. அவரது பெற்றோரின் வீடு ஒரு பகுதி ஆச்சாரமானதாக வும், ஒருபகுதி முற்போக்காகவும் இருந்திருக்க வேண்டும். அந்த மக்கள் வாழும் முறையில் ஏரளமான மதச்சார்பின்மை நிகழ்ந்துள்ளது. குமாரின் இறுதிச்சடங்கு என்னை சிந்திக்க வைத்தது. ஒரு பிராமணனோ, ஆசாரமானவரோ, இல்லையோ ஒரு மகாராஷ்டிரர் ஒருபோதும் இறந்த பிறகு புதைக்கப்பட மாட்டார். இத்தகைய விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவோ, நிறை வேற்றப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதே யில்லை. ஒருவர் தனது உடலை மருத்துவக் கல்விக்கும், பரிசோதனைக்கும் தானம் கொடுக்க விரும்புவார். அந்த விருப்பத்தை யாரும் கோபமாகப் பார்ப்பதில்லை. குமாரின் உடலைப் புதைக்கும் அந்த இறுதிச் செயல்பாடு, போராட்டம் என்ற நெருப்பில் புடம் போட்ட ஒருமைப்பாடு. குமார் தனது கலாச்சாரப் பையையும் தன்னுடன் கொண்டு சென்றிருந் தால் அது புடம் போடப்பட்டிருக்காது. குமாரின் பூர்வீக வீடு மிராஜ் நகரத்தில் இருக் கிறது. அந்நகரம் பொறாமைப்படும் வகையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நடைமுறைப் படுத்துவதற்கும், அவ்வப்போது வகுப்புவாத மோதல்கள் நடைபெறுவதற்கும் பெருமை கொள்வதாகும். குமாரின் வீடு பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது.
அவர் இயக்கத் தில் இணைந்து நந்தர்பாரில் பழங்குடியினர் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும், அந்தப் போராட்டத்தை மெதுவாக பல்வேறு ஒடுக்குமுறைகளையும், சுரண்டல் களையும் உருவாக்கும் இந்த முறையைத் தூக்கியெறியும் போராக மாற்றவும் தொடங்கிய போது அவர் வழக்கத்தால் அவரிடம் கொடுக்கப் பட்ட கலாச்சாரப் பையை உதறத் தொடங்கினார். அவர் தனது பாரம்பரிய வீட்டை விற்று விட்டுத் தனது தாய்க்காக ஒரு அடுக்குமாடிக் குடியிருப் பில் ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அவர் எப்போ தாவது சாதாரணக் காலத்தில் (அது அவருக்கு மிகவும் அரிது) கட்சியிலிருந்து விடுப்புப் பெற்று (அவர் முழுநேர ஊழியர்)அவரது தாய்க்குத் தேவைப்படும்போது சேவகம் செய்யச் செல்வார். சானடோரியத்தில் இருந்த அவரது மூத்த சகோதரிக்குச் சேவை செய்யவும் அவர் கட்சியிலிருந்து விடுப்புப் பெற வேண்டியிருந் தது. இந்த உதவியாளரின் வேதனைகளும், வலி களும் முழுதாக அவரது சொந்த விஷயம். மற்ற வர்களின் வலிகளையும், பிரச்சனைகளையும் கூட அவர் சொந்த விஷயமாக்கிக் கொண்டார். அவர் தனக்கென்று இருப்பதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள விரும்பினார், அவருக்கு மிகச் சிறிய தேவைகளே இருந்தன. அவர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் நான் பயன்படுத்தாத ஒரு பழைய செருப்பைக் கோரினார். நான் மிகவும் நொறுங்கிப் போனேன். அவர் தனது செருப்பை உடைந்து போகும் வரை பயன்படுத்தியிருந் தார். அதை இனியும் செருப்பு என்று கூற முடியாது. நான் புதிதாக ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறினேன். அவர் உறுதியாக மறுத்து விட்டார். வெறுங்காலுடனேயே திரும்பு வதாக மிரட்டினார். நான் சரணடைந்தேன். குமாரின் திருமண வாழ்வு மிகவும் குறுகி யது. மிகவும் குறுகியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். நான் ஒருமுறை அது பற்றி அவரைத் துருவிய போது, அவர் சொன்னார், “அரே. நீ அதில் நிறைய நேரத்தை வீணடிக்க வேண்டும். எனக்கு செய்வதற்கு அதைவிட நல்ல காரியங்கள் உள்ளன” என்று எளிதாகச் சொல்லி விட்டார். அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு வரும் அவரிடம் பெற்ற சிறு விஷயங்களைக் கூற விரும்பினர்.
சிலர் அவரிடம் காந்தியைக் கண்டனர், சிலர் பூலேவையும், சிலர் அம்பேத் காரையும் கண்டனர். ஆனால் அவர் கடைசி வரை கம்யூனிஸ்ட் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர். நான் அமர்ந்து அவர்களது உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சிந்தனை ஓடியது. அவரது நினைவைப் போற்ற எப்படிப்பட்ட நினைவகத்தை நாம் கட்ட முடியும்? தனிப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்து வது என்பது இயலாதது. எந்த சொந்தப் பொருட் களையும் விட்டுச் செல்வதைப் பழங்குடிக் கலாச்சாரம் உறுதியாக அனுமதிப்பதில்லை. அவரது முதுகுப்பை அவரது உடலுடன் வைக்கப் பட்டுப் புதைக்கப்பட்டு விட்டது. ஒரு அருங்காட்சியகம் என்பது மிதமிஞ்சிய யோசனை. அந்தப் பழங்குடிக் குடிசைகளில் ஒவ்வொன்றும் அவர் விட்டுச் சென்ற அருங்காட்சியகம்தான். களங்கமற்றவையின் அருங்காட்சியகம் என்ற ஒரு நாவலை ஓரான் பாமுக் எழுதியுள்ளார். அந்தப் பகுதியி லிருக்கும் ஒவ்வொரு வீடும் குமாரின் நினைவு களின் அருங்காட்சியகமே. நாங்கள் அனைவரும் மாலையில் கிளம்பி னோம். இன்று காலை ஒரு தோழர் செய்தி அனுப்பியிருந்தார். இளைஞர் குமார் தனது விதியை இந்தப் பழங்குடியினருடன் பிணைத்துக் கொண்டு 1971இல் நாராயண் தாக்கரே என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பதினேழு வயதாக இருந்த நாராயண் அவருக்கு உடனடியாக நம்பிக்கைக்குரிய தோழராக மாறினார். குமார் தாக்கரே குடும் பத்தில் ஒருவரானார். அது அவரது முகவரி யாக மாறியது. குமாரின் பெயர் தாக்கரேவின் ரேஷன் கார்டில் இடம் பெற்றது. வாக்காளர் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் கூட அந்த முகவரிதான் இடம்பெற்றது. குமாரின் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது, எழுபது வயது நாராயண் அஞ்சலி உரை களைக் கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அவர் விலகிச் செல்வதைப் பார்க்கவில்லை. அன்றிரவு நாராயண் பெரும் மாரடைப்பு ஏற்பட்டு மரண மடைந்தார். செவ்வணக்கம் காம்ரேட்
தமிழில்: கி.ரமேஷ்