இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு பாஜகவில் இருந்து விலகிய பெண் நிர்வாகி!
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாஜகவினர் இந்தி மொழிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பேசிவரும் நிலையில், அக்கட்சி யின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் ரஞ்சனா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய கத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது. என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதை எல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை. எனவே, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் விலகுவதாக” அறிவித்துள்ளார்.