tamilnadu

img

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என, டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ல் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

டிஎன்பிஎஸ்சி 2020 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. இதில் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீட்டு சலுகை தொடர்பான உத்தரவைப் பின்பற்றவில்லை. எனவே, 2020 குரூப்-1 தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கில வழியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாகப் பெற்று வேலைக்கு சேர்கின்றனர். அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

;