tamilnadu

img

இந்நாள் மே 15 இதற்கு முன்னால்

1718 - உலகின் முதல் எந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமை, ஜேம்ஸ் பக்கிள் என்ற ஆங்கிலேயருக்கு லண்டனில் வழங்கப்பட்டது. கப்பல்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இது, (பிற்காலத்தில்வந்த ரிவால்வர்போல!) சுழலும் அமைப்பிலிருந்து 6இலிருந்து 11 குண்டுகள்வரை தொடர்ச்சியாகச் சுடவும், அதன்பின் குண்டுகள் நிரப்பப்பட்ட மற்றொரு சுழலை நிரப்பிக்கொள்ளவும்கூடியதாகவும் இருந்தது. 1722இல் புயல் மழைக்கு நடுவே நிமிடத்திற்கு 9 குண்டுகளை இத்துப்பாக்கி சுட்டுக்காட்டியது. அக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்தது. எந்திரத் துப்பாக்கி என்று அழைத்துக்கொண்டாலும், தற்காலத்திய எந்திரத் துப்பாக்கிகளின் இலக்கணத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத இது, தானியங்கித் துப்பாக்கிக்கான முதல் காப்புரிமையைப் பெற்றது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை சுடுவதற்கு முன்னும் குண்டை நிரப்பும் தேவையில்லாத முதல் துப்பாக்கி 1580இல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. 1600களில் உருவான, குண்டு, வெடிமருந்து இரண்டையும் நிரப்பிக்கொள்ளும் கேல்த்தாஃப், குக்சன் துப்பாக்கிகள், அக்காலத்தில் மிகவேகமானவையாக இருந்தாலும், ஒரே மாதிரியான தோட்டாக்கள் உருவாகும்வரை தொடர்ச்சியாகச் சுடுதல் சிரமத்திற்குரியதாகவே இருந்தது. 1700களின் தொடக்கத்தில், நவீன எந்திரத் துப்பாக்கிகளுக்கு முன்னோடியாக, தொடர்ச்சியாகச் சுடும் துப்பாக்கிகளைச் சீனர்கள் உருவாக்கிவிட்டனர். சுடப்பட்ட குண்டு வெளியேறும்போது ஏற்படும் எதிர்விசையை, அடுத்த குண்டை நிரப்புவதற்குப் பயன்படுத்தும் துப்பாக்கியை 1880களில் உருவாக்கிய ஹிராம் மேக்சிம் என்ற ஆங்கிலேயர்தான் எடுத்துச்செல்லத்தக்க, முழுமையான தானியங்கி நவீன எந்திரத் துப்பாக்கியின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது மேக்சிம் துப்பாக்கி, முதல் உலகப்போரில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. ரிச்சர்ட் கேட்லிங் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்த மின்சார மோட்டர்மூலம் குண்டு நிரப்பும் முறை, இன்றும் நவீன ஆயுதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்று, முழுமையாகத் தானியங்கியாகவும், மிகவேகமாகவும், தொடர்ச்சியாகவும் சுடக்கூடிய (எடுத்துச் செல்லத்தக்க அல்லது பொருத்தப்பட்ட) துப்பாக்கிகள் எந்திரத் துப்பாக்கிகள் என்று வரையறுக்கப்படுகின்றன. முழுமையாகத் தானியங்குபவையாக இருந்தாலும், எந்திரத் துப்பாக்கிகள் அல்லாதவையான தாக்குதல் ரைஃபிள்கள் முதலானவற்றால், தொடர்ச்சியாக அதிகநேரம் சுட முடியாது.அறிவுக்கடல்