tamilnadu

img

பெரம்பலூர் அருகே பேரளியில் அராஜகம் தலித்துக்கு ஒதுக்கிய ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் தலித் சான்றிதழ் பெற்ற பிற்படுத்தப்பட்டவர் தேர்வு

பெரம்பலூர், டிச.26- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக தீண்டாமை வன்கொடுமை நிலவி வருகிறது. தலித் மக்கள் பொது வழித்தடங்களில் சைக்கிளில் ஏறி செல்ல முடியாது. இந்த கொடுமையை கண்டித்து 2003 ஆம் ஆண்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினிஅலி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றைக்கும் அப்பகுதி மக்கள் ஆதிக்க சாதியினருக்கு பிணம் எரிக்கவும் மேளம் அடிக்கவும் மொத்தத்தில் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். பேரளி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் 5 ஆயிரம் தலைக்கட்டுக்கு மேல் உள்ளனர். தலித் பகுதி மக்கள் 350 குடும்பங்களே வசிக்கின்றன. இந்நிலையில் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித் சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலித் சான்றிதழ் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தலித் மக்களின் சார்பாக அ.சிகாமணி, ந.மின்னல்கொடி, அ.தேன்மொழி, மு.நிவிதா, சி.பரமேஸ்வரி, செ.விஜயா ஆகிய பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆறு பேர் போட்டியிடுகின்றனர். தங்களுக்கு சேவகம் செய்து வருகின்ற அடிமை ஜாதிகளை சேர்ந்தவர்களை தலைவர்களாக தேர்வு செய்வதா என்று ஆதிக்க சாதியினர், அவர்கள் தலைவர் ஆவதை தடுப்பதற்காக கூடலூர் என்ற வெளியூரிலிருந்து பிழைப்பதற்காக பேரளி கிராமத்திற்கு வந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சாந்தி என்பவருக்கு தலித் என்று சான்றிதழ் பெற்று ஊராட்சி தலைவர் பதவிக்கு தலித் மக்களுக்கு எதிராக போட்டியிட தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆதிக்க சாதியினர் மட்டும் ஒன்று கூடி கூட்டம் நடத்தி ஒன்றிய கவுன்சிலர் பதவியை க.மணிகண்டன் என்பருக்கு 21 லட்சத்திற்கும் ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ராமசாமி என்பவருக்கு 18 லட்சத்திற்கும் வார்டு உறுப்பினருக்கு 3 லட்சம் என ஏலம் விட்டு தேர்வு செய்து விட்டதாக தலித் மக்கள தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதியினரே தேர்வு செய்ததால் ஊராட்சி தலைவர் சாந்தியிடம் உதவி தலைவராக தேர்வு செய்த ராமசாமி தான் தலைவராகவும் செயல்படுவார் என பத்திரத்தில் உறுதிமொழி வாங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர், எம்.பி., பார்வையாளரிடம் புகார்
இது குறித்து தலித்மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் சாந்தா, தேர்தல் பார்வையாளர் அனில்மேஷரம் மற்றும் எஸ்.பி., நிஷாபார்த்திபன் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பேரளி தலித் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை, செயலாளர் எம்.கருணாநிதி, விவசாய சங்க தலைவர் செல்லமுத்து ஆகியோர் பேரளி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்த போது அரசு இடஒதுக்கீட்டின்  அடிப்படையில் தலித்துக்கென அறிவித்த ஊராட்சி தலைவர் பதவியை முறைகேடாக ஏலத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை தேர்வு செய்தது ஜனநாயக விரோதமானது. இதனை தீண்டாமை ஒழிப்ப முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து தலித் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்துகிறோம் என்றனர்.

;