tamilnadu

img

பாஜக ஆளும் உ.பி.யில் பசியால் இளவயது புலம்பெயர் தொழிலாளர் பலி

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கில் மக்கள் அவதியைக்கண்டுகொள்ளாத மத்திய,மாநில பாஜகஆட்சிகளில் மேலும் ஒரு கொடுமையாக, உத்தரப்பிரதேச இளவயது தொழிலாளி பசியால் இறந்தான். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால்மக்கள், தொழிலாளர்கள் வருமான மின்றி, உணவின்றி பெரும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து வசதி செய்துகொடுக்கப் படாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிள்களிலும் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷகாரன்பூரைச் சேர்ந்த விபின் குமார் எனும் 19 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில்  மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்தார்.

ஊரடங்கால்  கடை மூடப்பட்டதால் வேலையிழந்த விபின் குமார் கையில் பணமில்லாமல் லூதியானாவிலிருந்து 350 கி.மீ. தொலைவு நடந்துவந்து ஷகரான்பூர் அருகே  சொந்த ஊரான ஹர்தோய் சுர்சாவுக்குச் சென்றார்.ஏறக்குறைய 6 நாட்கள் லூதியானாவிலிருந்து நடந்து சென்ற விபின் குமார் ஷகரான்பூர் அருகே வந்தபோது பட்டினியில் சுருண்டு சாலையில் விழுந்தார். அப்பகுதியில்  சென்றவர்கள் விபின் குமாரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விபின் குமார் உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பசி பட்டினியில் விபின் குமார் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மே 12 ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புலம்பெயர் தொழிலாளர் விபின் குமார் பட்டினியால் இறந்தது குறித்து நாளேடுகள், ஊடகங்கள் வாயிலாக அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு  தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனை தொடர்ந்து வருகிறது.இதில் உத்தரப் பிதேசத்தைச் சேர்ந்த விபின் குமார் எனும் புலம்பெயர் தொழிலாளி பட்டினியால் இறந்தது மிகவும் தீவிரமான மனித உரிமைமீறலாகும். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேசஅரசின் தலைமைச்செயலாளர் அடுத்த 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள், உணவு, குடிநீர், உறைவிடம், சொந்த ஊர்செல்ல செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;