tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி... 27 விடுதலை வீரர் சந்திரசேகர ஆசாத்....

தமது 15ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டவர் சந்திரசேகர ஆசாத். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தியில் ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே, நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற, அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் ‘பாரத் மாதா கி ஜெ’(இப்போது சங்கிகள் எழுப்பும் முழக்கமல்ல)  எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரிட்டிஷ் அரசின் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.

இன்று அவரது நினைவு நாள்...

;