tamilnadu

img

கருப்புப் பணத்தை கைப்பற்றுமா மோடி அரசு?

புதுதில்லி:
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள 50 இந்தியர்களின் பெயர் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வழங்கவுள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடு களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களும் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபர்களும் தங்களது சொத்துகளுக்கு சொந்த நாட்டில் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்து அங்கு கருப்புப் பணத்தைப்பதுக்கி வைக்கின்றனர். இந்த மோசடி யாளர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டு அரசால் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படுவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளி லிருந்து அங்கு அதிகளவில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கின்றனர்.

அங்குக் கொட்டிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறியும் பலன் இல்லை. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப்பொறுப்பேற்றபோது சுவிஸ் நாட்டில் உள்ளகருப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் நடக்கவில்லை.சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறு அந்நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர் களின் விவரங்களை வழங்க சுவிஸ் அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 50 இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு வழங்கவுள்ளது.

இந்த 50 தனிநபர்கள் ரியல் எஸ்டேட், நிதிச்சேவை, தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு, வீட்டு அலங்காரம், ஜவுளி, பொறியியல் சாதனங்கள், ரத்தின ங்கள் மற்றும் நகைத் துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சுவிஸ் வங்கி தரப்பிலிருந்து நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்க மறுத்துவிட்டதால் இவர்களைப் பற்றிய விவரங்கள் விரைவில் இந்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கி களில் பணம் பதுக்கி வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட இந்தியர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;